உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் 10 வருடங்களாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.
இருப்பினும் சாதாரண இருதரப்பு தொடர்களில் மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ள இந்திய அணி அழுத்தமான தொடர்களில் சொதப்புவதில் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்பதை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த மெகா தோல்வியால் மீண்டும் நிரூபித்தது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் அழுத்தமான போட்டிகளில் இந்தியாவை கைவிடுவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது போக கெளதம் கம்பீர், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என 2011 உலகக் கோப்பை வெல்வதற்கு இடது கை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றினர்.
கபில் தேவ் கருத்து:
ஆனால் இம்முறை களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் அணியில் ரோஹித் முதல் பாண்டியா வரை அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பது பெரிய பின்னடைவை ஏற்படுத்த காத்திருக்கிறது. அதை சரி செய்வதற்காக வளர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் காயத்தால் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படும் நிலையில் முதன்மை கருப்பு குதிரை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ராவும் இன்னும் முழுமையாக குணமடையாதது இந்திய ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் அம்சமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் உலக கோப்பைக்கான அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலைமையில் முக்கியமான வீரர்கள் காயமடையாமல் இருப்பதே வெற்றி பெறுவதற்கான முதல் வழி என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார். எனவே துருப்புச்சீட்டு வீரர்கள் காயமடையாமல் இருந்தால் ஒவ்வொரு தொடரை போலவே இம்முறையும் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா களமிறங்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.
“அது எவ்வாறு செல்லும் என்று எனக்கு தெரியாது. அவர்கள் இன்னும் உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த பல வருடங்களாகவே ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணியாகவே இந்தியா களமிறங்கி வருகிறது. எனவே வெற்றி என்பது உங்களுடைய அணி எவ்வாறு அனைத்து துறைகளிலும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட்டு வருகிறது என்பதை பொறுத்து அமையும். ஆனாலும் இதற்கு முன் நாம் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றுள்ளோம்”
“அதனால் இம்முறையும் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் அதை மீண்டும் நிகழ்த்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குறிப்பாக 4 வருடத்திற்கு ஒருமுறை வரும் உலகக் கோப்பையை வெல்வதற்கு நம்முடைய வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன். எங்களுடைய காலத்தில் நாங்கள் பெரும்பாலும் அதிக கிரிக்கெட்டில் விளையாட மாட்டோம். ஆனால் இப்போதுள்ள வீரர்கள் 10 மாதங்கள் தொடர்ந்து விளையாடுகின்றனர்”
“அதனால் காயங்களிலிருந்து உங்களது உடலை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக வெவ்வேறு வீரர்களின் உடல் வித்தியாசமானது என்பதால் அதற்குத் தகுந்தார் போல் தனித்தனியே ஃபிட்னஸ் திட்டங்களை கடைபிடிக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் 1975, 1979 சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் விளையாடதது பற்றி அவர் வேதனை தெரிவித்தது பின்வருமாறு.
இதையும் படிங்க:ஆஸி, இங்கிலாந்து உட்பட 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 4 புதிய தொடர்கள் – பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை இதோ
“வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக்கோப்பையை பார்ப்பது வலியை கொடுக்கிறது. குறிப்பாக அவர்கள் இல்லாத ஒருநாள் தொடரை நினைத்து பார்க்க முடியவில்லை. அவர்கள் மகத்தான வீரர்களை உருவாக்கியுள்ளார்கள். இருப்பினும் ஏன் அவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் விரைவில் கம்பேக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.