பும்ரா, பண்ட் மாதிரி அவரும் காயமடைஞ்சு 2023 உ.கோ ஜெயிக்க முடியாம போயிருமோன்னு பயமா இருக்கு – கபில் தேவ் கவலை

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் இம்முறை முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அந்த நிலையில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சொல்லப்போனால் 2013க்குப்பின் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த இந்தியா நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனவே இம்முறை அதை எப்படியாவது உடைத்து வெற்றி காண வேண்டும் என்ற முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தா வரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்து இருதரப்பு தொடர்களில் மிரட்டும் இந்தியா முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை சமீபத்திய 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் காண்பித்தது.

கபில் தேவ் கவலை:
அத்துடன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் முக்கிய போட்டிகளில் கை விடுவது மற்றும் அஸ்வின் போன்ற தரமானவர்களை தேர்வு செய்யாமல் கழற்றி விடுவது என சமீப காலங்களில் சந்தித்த தோல்விகளிலிருந்து இந்தியா எந்த பாடத்தையும் கற்காமலேயே இருந்து வருகிறது. அதை விட பந்து வீச்சு துறையில் கருப்பு குதிரையாக திகழும் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விளையாடாதது 2022 ஆசிய கோப்பை டி20 உலக கோப்பையிலும் அவருடன் ரிஷப் பண்ட் இல்லாதது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.

Hardik-Pandya

அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையிலும் அவர்கள் பங்கேற்பது சந்தேகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவர்களை விட மிகவும் முக்கியமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தை சந்திப்பவராக இருந்து வருவதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவலை தெரிவித்துள்ளார். ஒருவேளை இத்தொடருக்கு முன் அவர் காயமடைந்து வெளியேறினால் இந்தியா வெல்வது கடினம் என்று பயத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் வாழ்விலும் காயங்கள் என்பது ஒரு அங்கமாகும். இருப்பினும் தற்போதைய இந்திய அணியின் நிலைமை (பும்ரா, பண்ட்) முன்னேறும் என்று நான் நம்புகிறேன். அதே சமயம் ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை விரைவாக சந்திப்பவராக இருந்து வருகிறார். எனவே அவரை போன்ற வீரர்கள் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே இந்தியா வலுவான அணியாக மாற முடியும். மேலும் உலகக் கோப்பை என்பது ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும்”

Kapil

“எனவே அதில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக அதற்கு பயிற்சிகளை எடுக்கும் வகையில் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2018 வாக்கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்திய ஹர்திக் பாண்டியா அதன் பின் காயத்தை சந்தித்து சுமாராக செயல்பட்டதால் 2021 டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்டார். அதைத்தொடர்ந்து 2022 ஐபிஎல் தொடரில் குஜராத்தை சிறப்பாக வழி நடத்திக் கோப்பை வென்ற அவர் தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க:2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரரான அவர்தான் அதிக விக்கெட்டுகளை எடுப்பார் – முரளிதரன் கருத்து

இருப்பினும் அதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்துள்ள அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடாமல் தேவைப்படும் போது மட்டுமே பந்து வீசுகிறார். அந்த வகையில் இன்னும் முழுமையாக குணமடையாமல் அடிக்கடி காயத்தை சந்திப்பவராக இருக்கும் அவரும் பும்ரா, பண்ட் வரிசையில் விலகினால் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement