
பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 21-ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் துவங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி ரிஸ்வான் (171) மற்றும் சவுத் ஷாக்கில் (141) ஆகியோரது அசத்தலான ஆட்டத்தின் காரணமாக தங்களது முதல் இன்னிங்சில் 448 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி முஸ்பிகுர் ரஹீமின் (191) சிறப்பான ஆட்டத்தால் 565 ரன்கள் குவித்து 117 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் 117 ரன்கள் பின்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணியானது வங்கதேச அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதன் காரணமாக 30 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை துரத்தி விளையாடிய அந்த அணி 6.3 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.
அதோடு தற்போது தான் முதல் முறையாக வங்கதேச அணி பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான அணியின் இந்த மோசமான ஆட்டத்தை விமர்சித்து பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் கூறுகையில் : ரிஸ்வான் மட்டும் இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் அடிக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வித்யாசத்தில் தோற்றிருக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நமது அணியில் உள்ள எந்த வீரர்களும் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. முதலில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றீர்கள், அதுமட்டுமில்லாமல் ஆசிய கோப்பை தொடரிலும் தோற்றீர்கள், டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டீர்கள் தற்போது வங்கதேச அணியிடம் தோற்று இருக்கிறீர்கள். இப்படி தொடர்ச்சியான தோல்வியை அளித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறீர்கள்.
இதையும் படிங்க : விராட் கோலி அந்த தப்பை செய்திருக்கக்கூடாது.. கொஞ்சம் அவசரப்பட்டு அந்த முடிவை எடுத்துட்டாரு – சஞ்சய் பாங்கர் கருத்து
வங்கதேச அணிக்கு இது கடினமான நேரமாக இருந்தாலும் அந்த அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நமது பாகிஸ்தான் வீரர்கள் கிளப் கிரிக்கெட் வீரர்களை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கிளப் வீரர்கள் கூட பாகிஸ்தான் வீரர்களை விட சிறப்பாக ஆடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இந்த தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று இது மிகவும் மோசமான ஆட்டம் என கம்ரான் அக்மல் பேசியது குறிப்பிடத்தக்கது.