இது கண்மூடித்தனமான சோதனை, இஷ்டத்துக்கு யூஸ் பண்ணா சஞ்சு சாம்சன் என்ன செய்வாரு – டிராவிட்டை விளாசும் கம்ரான் அக்மல்

Kamran Akmal
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 150 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 6, கில் 3, சூரியகுமார் யாதவ் 21, ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய திலக் வர்மா வருமா 39 (22) ரன்கள் எடுத்தார்.

முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்து வரும். மாற்றங்கள் நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகக்கோப்பைக்கு 100 நாட்கள் கூட இல்லாத நிலையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் 12 வருடங்கள் கழித்து ரோகித் சர்மாவை 7வது இடத்தில் களமிறக்கிய அவருடைய சோதனைகள் 2வது போட்டியில் 5 வருடங்கள் கழித்து தோல்வியை கொடுத்தது. அந்த வரிசையில் இந்த போட்டியில் பொதுவாக 1 முதல் 4 வரையிலான டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சன் சம்பந்தமின்றி 6வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று அழுத்தமான சூழ்நிலையில் 1 சிக்சருடன் 12 (12) ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

பிளானிங் இல்ல:
இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சோதனைகள் செய்வதில் தவறில்லை ஆனால் அதில் ஒரு திட்டமிருக்க வேண்டுமென ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார். குறிப்பாக இத்தொடரை வென்ற பின் திலக் வர்மா போன்ற இளம் வீரருக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுப்பதே சரியான திட்டமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் சஞ்சு சாம்சன் 4வது இடத்தில் விளையாடியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஏனெனில் இதற்கு முன் ஐபிஎல் போன்ற ஏதேனும் தொடரில் சஞ்சு சாம்சன் 6வது இடத்தில் விளையாடியுள்ளாரா என்று கேள்வி எழுப்பும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அந்த போட்டியில் சேசிங் செய்ய வந்த போது இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் அதீத தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது என்று நினைக்கிறேன். குறிப்பாக இதெல்லாம் ஒரு இலக்கா என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த அவர்கள் எந்த திட்டத்துடனும் களமிறங்கவில்லை”

- Advertisement -

“பொதுவாக எந்த இலக்காக இருந்தாலும் நீங்கள் திட்டமிட வேண்டும். அதை அந்த போட்டியில் பார்க்க முடியவில்லை. மேலும் அணியில் இருக்கும் வீரர்கள் கம்பேக் கொடுக்கிறார்களா அல்லது ஏற்கனவே அணியில் இருக்கிறார்களா என்பதற்கேற்றார் போல் அவர்களுடைய வேலையை தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில் சஞ்சு சாம்சன் பற்றி நீங்கள் பேசும் போது அவர் எப்போதாவது ஐபிஎல் தொடரில் 6வது இடத்தில் விளையாடியுள்ளாரா? பொதுவாக டாப் 4 இடத்தில் விளையாடும் அவருக்கு அங்கேயே வாய்ப்பு கொடுங்கள்”

“அதிலும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இல்லாத நிலைமையில் அவரை போன்ற வீரருக்கு நீங்கள் டாப் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். மாறாக ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் 6வது இடத்தில் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் மீண்டும் அதை செய்வார் என்ற எண்ணத்துடன் நீங்கள் அவரை அங்கே களமிறக்கினீர்கள். ஆனால் அது ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக அமையாது. அந்த போட்டியில் திலக் வர்மா அறிமுகமாக வாய்ப்பை பெற்று அல்சாரி ஜோசப்புக்கு எதிராக அசத்தலாக செயல்பட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறேன்”

இதையும் படிங்க:IND vs WI : திலக் வர்மாவிற்கு தொடர்ந்து டி20 அணியில் வாய்ப்பு குடுங்க. ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு – ஏன் தெரியுமா?

“ஆனால் அந்த இடத்தில் விளையாட சஞ்சு தான் சரியானவர். ஏனெனில் தொடரை வென்ற பின் வேண்டுமானால் நீங்கள் இளம் வீரர்களுக்கு புதிய வாய்ப்பை கொடுக்கலாம். அதை செய்யாத நீங்கள் ஏற்கனவே அணியில் இருப்பவரை பின்னுக்கு தள்ளி புதியவருக்கு வாய்ப்பு கொடுத்தால் எப்படி அசத்த முடியும்” என்று கூறினார்.

Advertisement