விண்டேஜ் தோனி.. 42 வயசு தான் ஆகுதா? வர்ணிக்க வார்த்தையில்ல.. கண்டிப்பா அதை செய்வாரு.. ஸ்ரீகாந்த் பாராட்டு

Srikkanth
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நடப்பு சாம்பியன் சென்னை தங்களுடைய முதல் தோல்வியை பதிவு செய்தது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 37* (16) ரன்கள் அடித்தது ரசிகர்களை கொண்டாட வைத்தது. குறிப்பாக அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் ஒற்றைக் கையில் அடித்த சிக்சர் உட்பட 20 ரன்கள் அடித்த அவர் மொத்தமாக 4 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டார்.

அந்த வகையில் 42 வயதானாலும் தம்முடன் பிறந்த ஸ்டைல் எப்போதும் மாறாது என்பதை தோனி மீண்டும் நிரூபித்தார். அதனால் தோல்வியை சந்தித்தாலும் கூட தோனியின் பேட்டிங்கை பார்த்து மெய்சிலிரித்த சிஎஸ்கே ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் 42 வயதை கடந்து விட்டார் என்று நம்ப முடியாத அளவுக்கு தோனி விளையாடுவதாக முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த வியப்பு:
மேலும் இந்தளவுக்கு அட்டகாசமாக விளையாடும் தோனி கண்டிப்பாக இன்னும் 2 வருடங்கள் விளையாடுவார் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இதை எப்படி வர்ணிப்பது என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு பக்கம் தோனியின் ரசிகராக இப்படி ஒரு இன்னிங்ஸ் விளையாடியதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்”

“42 வயதில் அவரைப் போன்ற ஒருவர் எந்த கவலையும் இல்லாமல் அசால்டாக சிக்ஸர்களை அடிக்கிறார். இது விண்டேஜ் தோனி. தன்னுடைய முதல் சர்வதேச போட்டியிலேயே டக் அவுட்டான தோனி 2005இல் விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் பவுலிங் அட்டாக்கை தெறிக்க விட்டார். பாயிண்ட் திசைக்கு மேலே சிக்ஸர் அடித்த அவர் மிட் விக்கெட் மேலே ஒற்றை கையில் சிக்சர் அடித்தார். அனைத்து திசைகளிலும் அடித்த அவர் டெல்லி பவுலிங் அட்டாக்கை திணறடித்தார்”

- Advertisement -

“ஆரம்பத்தில் தோனி பெரிய ஷாட் அடிப்பதற்காக பாயிண்ட் திசையை பயன்படுத்துவார். ஆனால் தற்போது கவர்ஸ் திசையில் அவர் அடித்த சிக்சர் அற்புதமாக இருந்தது. டெல்லி சிறப்பாக பந்து வீசியது. சிஎஸ்கே தோற்றது. ஆனால் இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு வெற்றியாகும். ஏனெனில் அனைவரும் தோனி பேட்டிங் செய்வதை பார்க்க காத்திருந்தனர். கீப்பிங் பொறுத்த வரை இப்போதும் அவர் இந்தியாவின் நம்பர் ஒன் கீப்பராக இருக்கிறார்”

இதையும் படிங்க: தோற்றாலும் தோனி எங்களை அதுலருந்து அழகா காப்பாத்திட்டாரு.. பயிற்சியாளர் பிளெமிங் பாராட்டு

“சஹா 2வது இடத்தில் உள்ளார். தோனி பேட்டிங்கை எளிதாக காட்சிப்படுத்துகிறார். கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அசத்தும் அவர் ரன்கள் எடுப்பதற்காக சிறப்பாக ஓடுகிறார். அவருக்கு 42 வயது தான் ஆகிறதா? அவர் இன்னும் 2 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இருப்பினும் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement