ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடி வருகிறது. அவரது தலைமையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ மூன்று வெற்றி 2 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா வெற்றி பெற்றால் தங்களது அணியை பாராட்டுவதும் தோற்றால் பொதுவெளியில் திட்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த வருடம் 16 கோடிக்கு விளையாடிய கேஎல் ராகுல் ஒரு போட்டியில் தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்தார். அதனால் பொதுவெளியில் ராகுலை அவர் திட்டியது விமர்சனங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதனால் திருந்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இம்முறை 27 கோடிக்கு கேப்டனாக விளையாடும் ரிஷப் பண்ட்டை தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் பொதுவெளியில் திட்டாத குறையாக பேசி வருகிறார்.
பயிற்சியாளருக்கே சவால்:
ஆனால் வெற்றி பெற்றால் அப்படியே மாறி சிரித்த முகத்துடன் கட்டிப்பிடித்து பாராட்டி வருகிறார். மறுபுறம் அவற்றை செய்ய வேண்டிய லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவை அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் சஞ்சீவ் உரிமையாளராக இருக்கும் லக்னோ அணியில் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருவதாக ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.
அதே சமயம் 2021 டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்காக வென்ற அனுபவத்தைக் கொண்ட நீங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்லாத வரை சிறந்த பயிற்சியாளர் கிடையாது என்று அவர் தன்னிடம் சவால் விட்டுள்ளதாகவும் லாங்கர் கூறியுள்ளார். இது பற்றி மைக்கேல் கிளார்க் யூடியூப் பக்கத்தில் லாங்கர் பேசியது பின்வருமாறு. “சஞ்சீவ் அவர்களுடன் உட்கார்ந்து நான் பேசினேன்”
0% மன அழுத்தம்:
“மிகவும் அமைதியான நல்ல மனிதரான அவர் வெற்றிகரமான வணிகர். அந்த சந்திப்பின் கடைசியில் “ஜஸ்டின் நீங்கள் ஒரு பயிற்சியாளராக வெற்றிகரமான கேரியரைக் கொண்டுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதை எதிர்கொள்ளுங்கள். ஐபிஎல் கோப்பையை வெல்லாத வரை உங்களை நீங்களே சிறந்த பயிற்சியாளராக சொல்லிக் கொள்ள முடியாது” என்ற வார்த்தைகளைக் கூறினார்”
இதையும் படிங்க: ஆமா நான் தல ரசிகன் தான்.. போய் ஏழைகளுக்கு உதவுங்க.. தோனியை பச்சோந்தியென்ற சித்து.. ராயுடு பதிலடி
“சஞ்சீவ் அவர்கள் இருக்கும் லக்னோ அணியின் குடும்பத்தில் நான் 0% மன அழுத்தத்தை கொண்டுள்ளேன். அந்த அணியில் என்னுடைய அனுபவம் என்பது வெளியில் இருப்பவர்கள் நினைப்பதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து லக்னோ அணி தங்களது அடுத்த போட்டியில் குஜராத்தை ஏப்ரல் 12ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.



