ஃபைனலில் ஸ்லெட்ஜிங் செய்து ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்த விராட் கோலி – ஜஸ்டின் லேங்கர் பகிர்ந்த பின்னணி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 444 ரன்கள் என்ற சரித்திரத்தில் எட்டப்படாத இலக்கை இந்தியா துரத்தி வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 163, ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்கள் எடுத்த உதவியுடன் 469 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சுமாராக செயல்பட்டு வெறும் 296 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ரகானே 89, ரவீந்திர ஜடேஜா 48, தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றிய நிலையில் 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கம்மின்ஸ் 3 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அலெக்ஸ் கேரி 66* ரன்கள் எடுத்த உதவியுடன் 270/8 ரன்களில் டிக்ளேர் செய்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து மெகா இலக்கை துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் 164/3 ரன்களுடன் போராடி வருகிறது.

- Advertisement -

ஸ்லெட்ஜிங் விக்கெட்:
ரோஹித் சர்மா 43, கில் 18, புஜாரா 27 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறு நிலையில் களத்தில் விராட் கோலி 44* ரகானே 20* ரன்களுடன் போராடி வருகின்றனர். முன்னதாக இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 121 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித் 2வது இன்னிங்ஸிலும் 34 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்தார். அதனால் மீண்டும் குறைந்தது அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் திடீரென்று ரவீந்திர ஜடேஜா பந்தில் இறங்கி வந்து காட்டுத்தனமாக அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டாகி சென்றது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

இந்நிலையில் பொதுவாக கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவர் அப்படி அவுட்டானதற்கு பின்புலத்தில் விராட் கோலி செய்த ஸ்லெட்ஜிங் இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ஒரு சுமாரான ஷாட்டை அடிக்க முயற்சித்த போது அவரிடம் சென்ற விராட் கோலி “என்ன இவ்வளவு மோசமான ஷாட் விளையாடுறீங்க” என்று சொன்னதாக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நேரலை வர்ணைனையில் தெரிவித்தார்.

- Advertisement -

அப்போது வேறு யாராவது ஒருவர் அப்படி சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை விராட் கோலி தம்முடைய தரத்தை சந்தேகப்படும் வகையில் சொல்லி விட்டாரே என்று ஆதங்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் எப்படியாவது அந்த கருத்தை தவறென்று நிரூபிக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே தம்மை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய முறை அவுட் செய்த ரவீந்திர ஜடேஜாவை இறங்கி சிக்ஸராக அடித்து காட்டுவோம் என்று நினைத்தே அப்படி அவுட்டானதாக ஜஸ்டின் லாங்கர் கூறினார். இது பற்றி ரசிகர்கள் அறியாத பின்னணி பற்றி நேரலை வர்னணையில் அவர் பேசியது பின்வருமாறு.

“நேற்று ஸ்டீவ் ஸ்மித்திடம் சென்ற விராட் கோலி ஏன் குப்பையான ஷாட் அடித்தீர்கள் என்று கூறினார். அப்போது அவரைப் பார்த்த ஸ்டீவ் ஸ்மித் வேறு யாராவது அப்படி சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை போனால் போகட்டும் என்று விட்டிருப்பேன் என என்னிடம் சொன்னார். ஆனால் விராட் கோலி சொன்னது உண்மை தான்”

இதையும் படிங்க:WTC Final : ஒருவேளை மழையால் போட்டி நின்றால் இந்தியா தப்பிக்குமா? – ரூல்ஸ் சொல்வது என்ன?

“அது குப்பையான ஷாட் ஆகும் ஒருவேளை மக்கள் தொகையில் 99.9% பேர் அப்படி சொல்லியிருந்தால் கூட ஸ்டீவ் ஸ்மித் போனால் போகட்டும் என்று விட்டிருப்பார். ஆனால் விராட் கோலி சொன்னதால் அது உண்மை தான் என்று ஏற்றுக்கொண்டு அதை மாற்றி நிரூபிப்பதற்காக அவர் அப்படி விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement