வயதானாலும் ஸ்டைல் குறையாத நட்சத்திரம்! உலகசாதனை படைத்து அசத்தல் – என்ன தெரியுமா?

Goswami
- Advertisement -

நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி அன்று துவங்கிய இந்த உலக கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த உலகக்கோப்பையில் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

Women's World Cup 2022 IND vs PAK

- Advertisement -

கலக்கும் இந்தியா:
குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த தனது முதல் லீக் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் பரிதாப தோல்வி அடைந்தது. இருப்பினும் வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முக்கியமான 3-வது லீக் போட்டியில் 155 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா ருசித்தது. அப்போட்டியில் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து 123 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகி விருது வென்றார். அவருடன் 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய துணைக் கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் கடந்த 2017க்கு பின் முதல் முறையாக ஒரு சதம் அடித்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ஜூலன் கோஸ்வாமி உலகசாதனை:
இப்போட்டியில் 1 விக்கெட் எடுத்த அனுபவ இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை படைத்தார். இதுவரை 31 போட்டிகளில் 40 விக்கெட்டுக்களை எடுத்துள்ள அவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை லின் பியூல்ஸ்டன் (39 விக்கெட்கள்) இதுநாள் வரை தன்வசம் வைத்திருந்த சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். தற்போது 40 வயதை நெருங்கியுள்ள இவர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானவர்.

Women's World Cup

அதன்பின் தனது அபார திறமையால் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த இவர் கடந்த காலங்களில் இந்திய மகளிர் அணி பதிவு செய்த பல சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். தற்போது 39 வயதானாலும் கூட அலுப்பு தட்டாமல் தொடர்ந்து இந்தியாவின் வெற்றிக்காக விளையாடி வரும் இவரின் வயதிற்கான மந்தம் எப்போதுமே அவரின் பந்துவீச்சில் தெரிந்ததில்லை என்றே கூறலாம்.

- Advertisement -

மாறாத ஸ்டைல் – இந்தியாவுக்கு பெருமை:
சொல்லப்போனால் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல வயது ஆகஆக இவரின் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர ஒருபோதும் குறையவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமெனில் இந்த வயதிலும் கூட இவர் 120 – 130+ வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக சாதனை படைத்த இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீராங்கனையாக உலக சாதனை படைத்தார்.

goswami

தற்போது 198 ஒருநாள் போட்டிகளில் 249* விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருப்பவர் 180 விக்கெட்களுடன் உள்ளார் என்றால் இவர் எந்த அளவுக்கு தரமானவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் 349* விக்கெட்களுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒட்டுமொத்த சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாகவும் உலக சாதனை படைத்துள்ள இவர் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார்.

- Advertisement -

இந்தியா போன்ற இன்னும் கூட பெண்களுக்கு முழுமையான முன்னுரிமை கிடைக்காத நாட்டிலிருந்து வந்து இன்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் நிச்சயமாக இந்தியா மட்டுமல்லாது உலகின் அனைத்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் விளையாட வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் ரோல்மாடலாகவும் திகழ்கிறார். இப்படிப்பட்ட இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது போன்ற கௌரவ விருதுகளை வழங்கியுள்ள இந்திய அரசு இவரின் பெயரில் தபால் தலையையும் வெளியிட்டு பெருமை படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : என்ன? இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடிக்காததுக்கு பி.சி.சி.ஐ காரணமா? – ரசிகர்கள் கண்டனம்

இவ்வளவு சாதனைகளையும் பெருமைகளையும் பெற்றுள்ள இவர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக்கோப்பை இது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கடைசி முயற்சியில் இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்து வெற்றியுடன் விடை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement