
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து இந்த தொடரில் பின்தங்கியுள்ளது.
இந்த தொடரின் முதலாவது போட்டி கொல்கத்தா நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியிலும் சரி, இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தாலும் சரி இரண்டு ஆட்டத்திலேயுமே அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
குறிப்பாக முதல் போட்டியின் போது 68 ரன்கள் குவித்த அவர் இரண்டாவது டி20 போட்டியிலும் 45 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அவரை தவிர மற்ற வீரர்களின் மோசமான ஆட்டம் காரணமாகவே அந்த அணி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்த முதல் இரண்டு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாஸ் பட்லர் இந்திய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக இருந்த நிக்கோலஸ் பூராணின் சாதனையை அவர் முறியடித்து தற்போது முதலிடத்தற்கு வந்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நிக்கோலஸ் பூரான் 592 ரன்களை அடித்துள்ள வேளையில் தற்போது ஜாஸ் பட்லர் 611 ரன்கள் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எங்களிடம் இருந்து வெற்றியை தட்டிப்பறிச்சது அவர்தான்.. இந்திய வீரரை பாராட்டிய – ஜாஸ் பட்லர்
இவர்கள் இருவருக்கு அடுத்து கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஆரோன் பின்ச் ஆகியோரும் இந்திய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.