அவங்கள தலைகுனிய வெச்சுட்டேன்.. என் கேரியரின் லோயஸ்ட் பாய்ண்ட்.. கேப்டன் பட்லர் வேதனை பேட்டி

Jose Buttler
- Advertisement -

இந்தியாவில் கோலாலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 4ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. இத்தனைக்கும் அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலியாவை 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 71, கேமரூன் கிரீன் 47 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் 287 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு மீண்டும் ஜானி பேர்ஸ்டோ 0, ஜோ ரூட் 13, கேப்டன் ஜோஸ் பட்லர் 1, லியாம் லிவிங்ஸ்டன் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

கேரியரின் மோசமான தோல்வி:
அதனால் பென் ஸ்டோக்ஸ் 64, மொய்ன் அலி 42, கிறிஸ் ஓக்ஸ் 32 ரன்கள் எடுத்தும் 48.1 ஓவரில் இங்கிலாந்தை 253 ரன்களுக்கு சுருட்டி வென்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 5வது வெற்றியை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ள நிலையில் 6வது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

சொல்லப்போனால் அதிரடியாக விளையாடக்கூடிய அந்த அணி செமி ஃபைனலில் முதலாவதாக இருக்கும் என்று ஏராளமான முன்னாள் வீரர்கள் ஆரம்பத்திலேயே கணித்தனர். ஆனால் இந்தியாவில் அந்த எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட முடியாமல் சந்தித்த இந்த தோல்வியே தம்முடைய கேப்டன்ஷிப் கேரியரின் மோசமான புள்ளி என்று ஜோஸ் பட்லர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஏமாற்றம். கடந்த போட்டிக்கு பின் இதையே நாங்கள் பேசினோம். இன்றைய போட்டியில் பேட்டிங்கில் முன்னேற்றத்தை கண்டும் சற்று குறைவான ரன்களை எடுத்தோம். இருப்பினும் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதற்காக புகார் எதுவுமில்லை. இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் நாங்கள் வந்தோம். ஆனால் இப்படி நான் இங்கே நிற்பது என்னுடைய கேப்டன்ஷிப் கேரியரில் மோசமான புள்ளி. நாங்கள் எங்களுக்கு எந்த நீதியையும் செய்யவில்லை. நாங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்”

இதையும் படிங்க: பாண்டியா இடத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக.. பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டது ஏன்? டிராவிட் பதில்

“இப்போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டும் பார்ட்னர்ஷிப் சரியாக அமைக்காததால் 30 ரன்கள் குறைவாக எடுத்தோம். மேலும் நாங்கள் அடித்த ஷாட்கள் சரியானது. ஆனால் அதை சிறப்பாக செயல்படுத்தவில்லை. கேப்டனாக நானும் சிறப்பாக செயல்படாமல் என்னுடைய அணியையும் இங்கிலாந்து ரசிகர்களையும் தலைகுனிய விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்து அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவதை இதிலிருந்து கம்பேக் கொடுப்பதற்கான ஒரே வழியாகும்” என்று கூறினார்.

Advertisement