
இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக சுமாரான ஃபார்மில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டிகள் சதத்தை அடித்து 119 (90) ரன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அந்த வகையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் அவர் ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் பஸ்பால் என்ற பெயரில் இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து வருகிறது. ஆனால் அந்த அணுகு முறையில் இங்கிலாந்து கடந்த 2024 மார்ச் மாதம் இந்திய மண்ணில் 4 – 1 (5) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோற்றது.
அதை அடுத்து இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரிலும் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது. அந்த வரிசையில் தற்போது ஒருநாள் தொடரிலும் இந்தியாவில் வெற்றியைக் காண முடியாமல் இங்கிலாந்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் தாங்கள் விளையாட நினைத்த அதிரடியான அணுகுமுறையை ரோகித் சர்மா காண்பித்ததாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுவதுடன் தக்க சமயத்தில் அதிரடியாக விளையாடும் ரோஹித் சர்மாவின் வழியே ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெற சரியானது என்றும் அவர் கூறியுள்ளார். அதைச் செய்யாததால் இங்கிலாந்து தோற்றத்தைப் பற்றி அவர் ஆதங்கத்துடன் பேசியது பின்வருமாறு. “இன்றைய காலகட்டத்தில் 50 ஓவர் கிரிக்கெட்டை விளையாடும் நவீன முறையில் அதிரடி மிகவும் ஆற்றல் வாய்ந்தது, ஆக்ரோஷமானது என்பதை ரோகித் உண்மையாக காட்டினார்”
“நாங்கள் விரும்பும் விதத்தில் விளையாடி போட்டிகளை வெல்ல முயற்சிக்க நினைக்கும் வகையில் தான் ரோஹித் சர்மா விளையாடினார். ரோகித் சர்மா காண்பித்த வழியே நாங்கள் விளையாட விரும்பும் வழியாகும். அதுவே கிரிக்கெட்டை விளையாடுவதற்கான சரியான வழியாகும். எனவே ரோகித் சர்மா விளையாடிய விதம் எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல நினைவூட்டலாக இருக்கலாம்”
இதையும் படிங்க: டெயில் எண்டர் 3 பவுண்டரி.. ஷமியிடம் அந்த பவர் இல்ல.. அதுக்கு புவனேஸ்வரே பரவால்ல.. ஆகாஷ் சோப்ரா கவலை
“அவரைப் போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்டவர் அழுத்தத்தின் கீழ் விளையாடியதைப் பார்த்து எங்களுக்கு நாங்களே கொஞ்சம் எளிமையாக இருக்க வேண்டும்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றியைப் பெற இங்கிலாந்து முயற்சிக்க உள்ளது. அந்தப் போட்டி வரும் புதன்கிழமை அஹமதாபாத் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.