
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளில் 1 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்தது. அந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற ஓமனுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. ஆண்டிகுவா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமனை 13.2 ஓவரில் 47 ரன்களுக்கு இங்கிலாந்து சுருட்டியது.
ஓமனுக்கு அதிகபட்சமாக சோயாப் கான் 11 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 48 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பிலிப் சால்ட் 13, கேப்டன் ஜோஸ் பட்லர் 24*, வில் ஜேக்ஸ் 5, ஜானி பேர்ஸ்டோ 8* ரன்கள் எடுத்தனர். அதனால் 3.1 ஓவரிலேயே 50/12 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 101 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.
பட்லர் நம்பிக்கை:
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் டி20 உலகக் கோப்பையிலும் 100+ பந்துகளை மீதம் வைத்து வென்ற முதல் அணியாக இங்கிலாந்து இரட்டை உலக சாதனை படைத்தது. அதன் காரணமாக +3.081 என்ற அற்புதமான ரன் ரேட்டையும் இங்கிலாந்து பெற்றுள்ளது. அதனால் இங்கிலாந்து தங்களுடைய கடைசி போட்டியில் நமீபியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா அதனுடைய கடைசி போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தும் பட்டத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது.
ஆனால் பரம எதிரி இங்கிலாந்தை வெளியேற்றுவதற்காக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் திட்டத்துடன் விளையாடுவோம் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியா என்ன செய்யும் என்பதை பற்றி கவலைப்படாமல் நமீபியா போட்டியில் பெரிய வெற்றியை பெறுவதே தங்களுடைய வேலை என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“விக்கெட்டுகளை எடுத்து ஓமனை குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்திய எங்களுடைய பவுலர்கள் வெற்றிக்கான அடித்தளமிட்டனர். எங்களுக்கு 2 நாட்களில் மிகப்பெரிய போட்டி உள்ளது. இப்போட்டியின் பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருந்தது. அங்கே நல்ல லைன், லென்த்தை பின்பற்றி எங்களுடைய பவுலர்கள் பந்து வீசினர். அதில் கொஞ்சம் சுழலும் இருந்தது. அது இப்படி இருக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை”
இதையும் படிங்க: சேவாக் யார்? தன்னை விமர்சித்த இந்திய ஜாம்பவானுக்கு நெத்தியடி பதிலை கொடுத்த ஷாகிப் அல் ஹசன்
“அதில் அடில் ரசித் நன்றாக பந்து வீசினார். ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பதை பற்றி நாங்கள் பேசினோம். இந்த வெற்றியால் நாங்கள் மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் செல்கிறோம். ஸ்காட்லாந்து – ஆஸ்திரேலியா போட்டியை பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் எங்கள் மீது கவனம் செலுத்துகிறோம். நமீபியாவுக்கு எதிராக நடைபெறும் பெரிய போட்டியில் தான் எங்களுடைய கவனம் இருக்கிறது” என்று கூறினார்.