விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஜூன் 13ஆம் தேதி செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 159/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 64*, டன்சித் ஹசன் 35 ரன்கள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 160 ரன்களை சேசிங் செய்த நெதர்லாந்து சுமாராக விளையாடி 20 ஓவரில் 134/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக எங்கல்பேர்ச்ட் 33 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரிசாத் ஹுசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையும் சேர்த்து 3 போட்டிகளில் வங்கதேசம் 2வது வெற்றியை பதிவு செய்தது.
நெத்தியடி பதில்:
அதன் காரணமாக தங்களுடைய கடைசி போட்டியில் வென்றால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைக்கு வங்கதேசம் வந்துள்ளது. இந்த வெற்றிக்கு 64* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷாகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் சுமாராக விளையாடிய அவர் வங்கதேசத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
அப்போது நீங்கள் ஹைடன், கில்கிறிஸ்ட் கிடையாது என்பதால் ஒரு வங்கதேச வீரருக்கு தேவையான பேட்டிங்கை செய்யுமாறு அவரை இந்திய ஜாம்பவான் வீரந்திர சேவாக் விமர்சித்தார். சொல்லப்போனால் சமீபத்திய வருடங்களாகவே தடுமாறும் ஷாகிப் அல் ஹசன் காலம் முடிந்து நீண்ட நாட்களாகி விட்டதாக சேவாக் கூறினார். எனவே பேசாமல் ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறலாம் என்று அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இந்நிலையில் சேவாக்கின் அந்த விமர்சனம் பற்றி இப்போட்டியின் முடிவில் செய்தியாளர்கள் ஷாகிப்பிடம் கேட்டனர். அப்போது குறுக்கிட்ட அவர் சேவாக் யார்? என்று நெத்தியடி பதிலை கொடுத்தார். இது பற்றி ஷாகிப் பேசியது பின்வருமாறு. “யார்? ஒரு வீரர் எப்போதும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வருவதில்லை. பேட்ஸ்மேனாக இருந்தால் பேட்டிங்கிலும் பவுலராக இருந்தால் பந்து வீச்சிலும் அணியின் வெற்றிக்கு பங்காற்றுவதே அந்த வீரரின் வேலை”
இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை சி.எஸ்.கே பர்ஸ்ட்.. ஆர்.சி.பி செகன்ட்.. – எதில் தெரியுமா? விவரம் இதோ
“விக்கெட் விழுவது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. அதே போல அந்த வீரர் ஃபீல்டராக இருந்தால் ஒவ்வொரு ரன்னையும் சேமித்து நிறைய கேட்சுகளை பிடிக்க வேண்டும். இதை தவிர்த்து யாருக்காகவும் எதையும் பதிலாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது விளையாடும் வீரர் தன்னுடைய அணிக்காக எவ்வளவு பங்காற்ற முடியும் என்பதை பார்ப்பதே முக்கியம்” என்று கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



