
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இந்தியாவும் போராடி 387 ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் சமநிலை பெற்றது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 3வது நாள் மாலையில் 2 ஓவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
அப்போது இங்கிலாந்து துவக்க வீரர் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்கும் வகையில் நடந்து கொண்டார். குறிப்பாக பும்ரா வீசிய 5வது பந்து அவருடைய கையில் லேசாக மட்டுமே மோதியது. ஆனால் அதைப் பெரிய காயமாக வெளிப்படுத்திக் கொண்ட அவர் இங்கிலாந்து அணியின் மருத்துவரை வரவழைத்து நேரத்தை வீணடித்ததார்.
அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் கடுமையான சொற்களை பயன்படுத்தி அவரிடம் வாக்குவாதம் செய்தார். அதே போல இந்திய அணியினரும் இங்கிலாந்து வீரர்களை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் ஜாக் கிராவ்லி நேரத்தை வீணடிக்க சிறப்பாக நடித்ததாக சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.
இந்நிலையில் உண்மையில் அந்த தருணத்தில் சுப்மன் கில் தான் விராட் கோலி ஆக்ரோஷமாக கேப்டன்ஷிப் செய்வது போல நடித்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனதன் ட்ராட் விமர்சித்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் பெயரை குறிப்பிடாமல் அவர் விமர்சித்தது பின்வருமாறு. “இங்கிலாந்து ஃபீல்டிங் செய்த போது இந்திய அணியினரிடம் ஏதேனும் தேவையற்ற விஷயத்தை செய்தார்களா? என்பது எனக்குத் தெரியாது”
இதையும் படிங்க: இப்படி செஞ்சா கோபம் வராதா? 4வது நாளில் அனல் பறக்கும்.. கிராவ்லியுடன் மோதிய காரணம் பற்றி ராகுல்
“ஆனால் சுப்மன் கில்லின் நடிப்பு எனக்குப் பிடிக்கவில்லை. கேப்டனாக நீங்கள் உங்களுக்கென்று ஒரு தொனியை அமைத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட நீங்கள் விரலைக் காட்டி முந்தைய இந்திய கேப்டனைப் போல் எதிரணியின் முகத்தில் மோதலில் ஈடுபடுகிறீர்கள். இப்படி செய்வது மோசமான தொனியை அமைக்கும் என்று நினைக்கிறேன். களத்தில் நீங்கள் கடினமாக இருப்பதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நீங்கள் அதற்கு மேலே நிற்க வேண்டும். இந்த மோதல் நாளைய ஆட்டத்திற்கான அடித்தளத்தை நன்றாக அமைத்துள்ளது” எனக் கூறினார்.