
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 உலக கோப்பை தொடர் வரை தான் விளையாட விரும்புவதாகவும் விருப்பத்தை தெரிவித்து விட்டு தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது 37 வயதான விராட் கோலி எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட காத்திருக்கிறார். இவ்வேளையில் இந்த இங்கிலாந்து தொடரில் இரண்டாவது சர்வதேச வீரராக ஒருநாள் போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பில் தற்போது விராட் கோலி காத்திருக்கிறார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : ஒருநாள் போட்டிகளை பொருத்த வரை கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 311 போட்டிகளில் விளையாடி 54 சதம், 77 அரைசதம் என 14,797 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரின் மூன்று ஆட்டங்களில் அவர் 203 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15000 ரன்களை பூர்த்தி செய்வார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 15000 ரன்களை தொட்ட இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அவர் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இங்கிலாந்து மண்ணில் வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைத்தே ஆக வேண்டும் – காரணம் சொன்ன கவாஸ்கர்
ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை அதிக ரன்களை அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதலிடத்திலும், அவருக்கு அடுத்து விராட் கோலி 14797 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.