
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தசைப்பிடிப்பு (Cramps) பிரச்சனையால் அவதிப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவரது குஜராத் டைட்டன்ஸ் அணித்தோழரான ஜோஸ் பட்லர், இது சாதாரண தசைப்பிடிப்பு மட்டுமல்ல, இதற்கு பின்னால் வேறு உடல்நலப் பிரச்சனை இருக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அபாரமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த சுப்மன் கில், 80 ரன்களில் இருந்தபோது கால்தசை மற்றும் ஹாம்ஸ்ட்ரிங் பகுதியில் ஏற்பட்ட கடுமையான தசைப்பிடிப்பு காரணமாக ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ ஆனார்.
பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பெரிய காயம் எதுவும் இல்லை என்று தெரியவந்தாலும், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும் அவருக்கு மீண்டும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும், வலியை பொருட்படுத்தாமல் 77 ரன்கள் குவித்தார். ஆனால் அந்தப் போட்டியில் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரையும் 1-2 என்ற கணக்கில் இழந்தது.
முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், தனது ‘For The Love of Cricket’ போட்காஸ்டில் ஜோஸ் பட்லரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
“உங்கள் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், 70 ரன்களை கடந்த உடனே பர்மிங்ஹாம் மற்றும் லார்ட்ஸ் போட்டிகளில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அதனால் அவரது ஆட்டத்தின் வேகமும் குறைந்தது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?” என்று பிராட் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஜோஸ் பட்லர், “உண்மையில் எனக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. பேட்டிங் செய்து கொண்டிருக்கும் வீரர்களிடம் அதிகமாக பேச முடியாது. அதனால் ஸ்ரேயாஸ் ஐயரிடம், ‘கில்லுக்கு தசைப்பிடிப்பா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆமாம், அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்று கூறினார்”
தொடர்ந்து பேசிய பட்லர், “அப்போது அவர் 70 அல்லது 80 ரன்கள்தான் எடுத்திருந்தார். மேலும் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. இந்தியாவின் அகமதாபாத் போல 40 டிகிரி வெயில் அங்கே இல்லை. குளிர்ச்சியான சூழலில் கூட அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் என்ன பிரச்சனை என்பது எனக்குத் தெரியவில்லை”.
“அவருக்கு ஏற்கனவே ஏதாவது உட்புற காயம் அல்லது வேறு மருத்துவப் பிரச்சனை இருக்கலாம். எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் தசைப்பிடிப்பு காரணமாக அவரது பேட்டிங் வேகம் குறைந்தது. குறிப்பாக லார்ட்ஸ் போட்டியில் முக்கியமான நேரத்தில் அவர் விக்கெட்டை இழக்கவும் அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்” என்று பட்லர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சுப்மன் கில் பலமுறை உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்துள்ளார். 2023 உலகக் கோப்பைக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது, அவர் 6 முதல் 8 கிலோ வரை தசை வலிமையை இழந்ததாக தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு அடிக்கடி தசைப்பிடிப்பு மற்றும் கழுத்து தசை இறுக்கம் போன்ற பிரச்சனைகள் அவரை தொடர்ந்து பாதித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல், முன்னாள் வீரர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.