ENG vs NZ : சேவாக்கை மிஞ்சிய மிரட்டல் துவக்கம்.. உ.கோ வரலாற்றில் பேர்ஸ்டோ தனித்துவ உலக சாதனை

Jhonny Bairstow
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் இருக்கும் அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது. என்ன தான் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் தரத்தைக் கொண்டுள்ள இத்தொடருக்கு அன்றும் இன்றும் ரசிகர்களிடம் எப்போதுமே தனித்துவமான அபிமானம் இருக்கிறது என்றே சொல்லலாம்.

நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 அணிகள் மொத்தம் 48 போட்டியில் விளையாட உள்ளன. அந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் மதியம் 2.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

- Advertisement -

தனித்துவ உலக சாதனை:
அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்துக்கு எதிராக நட்சத்திர பவுலர் ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். அதில் முதல் பந்தில் ரன்கள் எடுக்காத ஜானி பேர்ஸ்டோ லெக் ஸ்டம்ப் பகுதியில் வீசப்பட்ட 2வது பந்தில் அப்படியே பிலிக் ஷாட் வாயிலாக ஃபைன் லெக் மேலே 80 மீட்டர் அட்டகாசமான சிக்சரை பறக்க விட்டார்.

இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரின் முதல் ரன்னை சிக்ஸராக அடித்து துவங்கிய முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ஜானி பேர்ஸ்டோ படைத்துள்ளார். கடந்த 1975 முதல் 2019 வரை நடைபெற்ற இதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் முதல் போட்டியின் முதல் ரன்னை எந்த பேட்ஸ்மேனும் சிக்ஸராக அடித்து எடுத்ததில்லை. குறிப்பாக 2011 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியாவின் வீரேந்திர சேவாக் பவுண்டரியை மட்டுமே அடித்து முதல் ரன்னை எடுத்தார்.

- Advertisement -

அந்த வகையில் தனித்துவமான சாதனை படைத்த அவர் 33 (35) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய டேவிட் மாலனும் 14 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ஹரி ப்ரூக் 25 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு வீரர் மொயின் அலி 11 (17) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 25 ஓவர்களில் இங்கிலாந்து 135/4 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

இதையும் படிங்க: பிளான் பண்ணதை விட 45 நிமிடங்கள் கூடுதலாக பிராக்டீஸ் பண்ண விராட் கோலி – எதற்கு தெரியுமா?

முன்னதாக இப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் அளவுக்கு உலகிலேயே மிகப்பெரியதாக இருக்கிறது. ஆனாலும் பிசிசிஐ’யின் சுமாரான செயல்பாடுகளால் உலகக்கோப்பையின் இந்த முதல் போட்டியை பார்ப்பதற்கு 10000 ரசிகர்கள் கூட வரவில்லை என்பது பெரும்பாலான இந்தியர்களை தலை குனிய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement