- Advertisement -
உலக கிரிக்கெட்

IND vs ENG : உலக நட்சத்திரங்களை விட ராக்கெட் வேகம் – இந்தியாவை ஆள்பவராக ஜோ ரூட் 2 புதிய வரலாற்று சாதனை

பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் விராட் கோலி, புஜாரா உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா 200 ரன்களை தொடாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் அதிரடியாக சதமடித்து 146 ரன்களும் அவருடன் மெதுவாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் விளாசினார். கடைசியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்க விட்ட ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை அற்புதமாக பந்துவீசி மடக்கிப் பிடித்த இந்தியா 284 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் விளாசினார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்சை விட மோசமாக பேட்டிங் செய்த இந்தியா வெறும் 245 ரன்களுக்கு பரிதாபமாக ஆல் அவுட்டானது.

விராட் கோலி, ஹனுமா விகாரி உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் 2-வது வாய்ப்பிலும் சொதப்பிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக பொறுப்பை காட்டிய புஜாரா 66 ரன்களும் ரிஷப் பண்ட் 52 ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 378 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்ற அபாரமான தொடக்கத்தை பெற்றது. அப்போது அலெஸ் லீஸ் 56, ஜாக் கிராவ்லி 46, ஓலி போப் 0 என 3 அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது.

- Advertisement -

பறிபோன வாய்ப்பு:
ஆனால் ஏற்கனவே முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அடுத்ததாக களமிறங்கி இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்து 4-வது நாளிலேயே இந்தியாவின் வெற்றியை கேள்விக்குறியாக்கினர். இன்றைய கடைசி நாளில் 119 ரன்கள் தேவைப்பட்ட போது சிறப்பாக பேட்டிங் செய்த அவர்களில் ரூட் 142* ரன்கள் பேர்ஸ்டோ 114* ரன்கள் என இருவருமே சதமடித்து பினிஷிங் கொடுத்து வெற்றி பெறச் செய்தனர். அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்த இங்கிலாந்து சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக எங்களை சாய்க்க முடியாது என்று இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் பும்ரா தலைமையில் 3 நாட்கள் அபாரமாக செயல்பட்ட இந்தியா கடைசி 2 நாளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சொதப்பி 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது. இந்த வெற்றிக்கு 2 இன்னிங்சிலும் சதமடித்து முக்கிய பங்காற்றிய ஜானி பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேபோல் 4 சதங்கள் உட்பட 737 ரன்களை 105.28 என்ற அற்புதமான சராசரியில் குவித்து தொடர் முழுவதும் கலக்கிய ஜோ ரூட் தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ராக்கெட் வேகம்:
கடந்த 2021 துவக்கத்தில் விராட் கோலி (27), ஸ்டீவ் ஸ்மித் (26), கேன் வில்லியம்சன் (24) ஆகியோருடன் உலகத்தரம் வாய்ந்த “ஃபேப் 4” பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் ஜோ ரூட் வெறும் 17 சதங்களுடன் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் அதன்பின் ராக்கெட் வேகத்தில் பேட்டிங் செய்த அவர் 11 சதங்களை அதிகமாக அடித்து மொத்தம் 28 சதங்களுடன் 10000 ரன்களை கடந்து அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார்.

இந்த காலகட்டத்தில் விராட் கோலி, கேன் வில்லியம்சன் ஆகியோர் சதமடிக்காத நிலையில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஒரு சதமடித்துள்ளார். மேலும் இந்த தொடரில் 4 சதங்கள் விளாசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்றை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ஜோ ரூட் : 9 சதங்கள்*
2. கேரி சோபர்ஸ்/ஸ்டீவ் ஸ்மித்/விவ் ரிசர்சர்ஸ்/ ரிக்கி பாண்டிங் : தலா 8 சதங்கள்

- Advertisement -

இதையும் படிங்க : IND vs ENG : அஷ்வினுக்கு சான்ஸ் தரல இப்போ அனுபவிங்க – வரலாற்று தோல்வியால் இந்திய நிர்வாகத்தை சாடும் முன்னாள் பாக் வீரர்

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையும் உலக அளவில் 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரிக்கி பாண்டிங் : 2555
2. ஜோ ரூட் : 2526*
3. அலஸ்டர் குக் : 2431

மேலும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மென் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்தார். அந்தப் பட்டியல்:
1. ஜோ ரூட் : 737 ரன்கள், 2021/22*
2. விராட் கோலி : 655 ரன்கள், 2016/17

- Advertisement -
Published by