
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2011 முதல் விளையாடி வரும் அவர் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு நிகராக நவீன கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக அசத்தி வருகிறார். அந்த வகையில் இதுவரை 143 போட்டிகளில் அவர் 12027* ரன்கள் குவித்துள்ளார்.
சொல்லப்போனால் விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன் ஆகியோரை முந்திக் கொண்ட அவர் அந்த நால்வரில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 24 வருட கேரியரில் 200 போட்டிகளில் 15,921 ரன்கள் அடித்தார்.
பாண்டிங் கணிப்பு:
எனவே இன்னும் 4 – 5 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஜோ ரூட் அவரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
அதற்கு முதலில் டி20 தொடர்கள் ராஜாங்கம் நடத்தும் இந்த நவீன யுகத்தில் இங்கிலாந்து ஒவ்வொரு வருடமும் 10 – 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதில் ஜோ ரூட் 800 – 1000 ரன்கள் அடித்தால் சச்சினை முந்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “33 வயதாகும் அவர் இன்னும் 300 ரன்கள் பின்தங்கியுள்ளார். அது இங்கிலாந்து எவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என்பதைப் பொறுத்தது”
“ஒரு வருடத்தில் இங்கிலாந்து 10 – 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் ரூட் 800 – 1000 ரன்கள் அடித்தால் 3 – 4 வருடத்திலேயே அங்கே செல்ல முடியும். அதற்கு 37 வயதாகலாம். அத்துடன் தற்போதுள்ள பசி அப்படியே தொடர்ந்தால் அதற்கான சாத்தியம் உள்ளது. கடந்த சில வருடங்களாக ஜோ ரூட் தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வருகிறார்”
இதையும் படிங்க: 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணிக்கு அந்த பிரச்சனையை வர விடமாட்டேன்.. ஜெய் ஷா வாக்குறுதி
“பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் 30 வயதின் ஆரம்பத்தில் உச்சத்தை தொடுவார்கள் என்று சொல்வார்கள். ஆரம்பக் காலங்களில் அரை சதத்தை அடித்த ரூட் அதை சதமாக அடிப்பதற்கு தடுமாறினார். இருப்பினும் சமீப காலங்களில் பெரும்பாலான அரை சதங்களை அவர் பெரிய சாதமாக மாற்றுகிறார். அதுவே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது” என்று கூறினார்.