
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா பதிலடி கொடுத்தது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் மூன்றாவது போட்டி ஜூலை 19ஆம் தேதி இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதத்தை அடித்து 104 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் பிரைடன் கார்ஸ் 56, ஜேமி ஸ்மித் 51 ரன்கள் அடித்து கை கொடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சித்து 13 (8) ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் அவுட்டானார். மறுபுறம் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி நிலையில் எதிர்புறம் கருண் நாயரும் நங்கூரமாக விளையாடினார். 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் கருண் நாயர் 40 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ஜோ ரூட் தரைக்கு அடியில் பந்தில் மேலே கையை விட்டு அற்புதமாக பிடித்தார்.
அதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 211* கேட்ச்கள் பிடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 210 கேட்ச்கள் பிடித்ததே நீண்ட காலமாக உலக சாதனையாக இருந்தது.
இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரூட் மொத்தம் 37* சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 5வது வீரர் என்ற டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 51
2. ஜேக் காலிஸ்: 45
3. ரிக்கி பாண்டிங்: 41
4. குமார் சங்கக்காரா: 38
5. ஜோ ரூட்: 37
6. ராகுல் டிராவிட்/ஸ்டீவ் ஸ்மித்: 36
இதையும் படிங்க: 387க்கு அவுட்.. முரளிதரன், கபில் தேவை முந்திய பும்ரா.. வாசிம் அக்ரமுக்கு நிகராக 2 வரலாற்று சாதனை
தொடர்ந்து நடைபெறும் போட்டியில் இந்தியா 100 ரன்கள் கடந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து வருகிறது. இங்கிருந்து இங்கிலாந்தை விட முன்னிலை ரன்களை பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. அதற்கு குறைந்தது ஒரு பேட்ஸ்மேன் சதத்தை அடிப்பது அவசியமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.