இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா பதிலடிக் கொடுத்தது. 3வது போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 18, பென் டக்கெட் 23 ரன்களில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் ஆட்டத்தை இழந்தனர். அடுத்ததாக வந்த ஓலி போப் நங்கூரமாக விளையாடிய நிலையில் 44 ரன்னில் ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார். இருப்பினும் ஜோ ரூட் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த ஹாரி ப்ரூக் 11 ரன்னில் ஜஸ்ப்ரித் பும்ரா வேதத்தில் போல்ட்டானார்.
387க்கு அவுட்:
இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ரூட் அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 44 ரன்கள் அடித்து சவாலைக் கொடுத்த போது கிளீன் போல்ட்டாக்கிய பும்ரா மறுபுறம் சதத்தை அடித்த ஜோ ரூட்டையும் 104 ரன்களில் போல்ட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த கிறிஸ் ஓக்ஸை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.
அதனால் கொஞ்சம் தடுமாறிய இங்கிலாந்துக்கு மிடில் ஆர்டரில் ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் ஜோடி சேர்த்து இந்தியாவுக்கு தொல்லைக் கொடுத்தனர். 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஜேமி ஸ்மித்தை 51 ரன்னில் காலி செய்த சிராஜ் மறுபுறம் 56 ரன்கள் குவித்த கார்ஸையும் போல்ட்டாக்கினார்.
பும்ரா 2 சாதனை:
இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சரை 4 ரன்னில் போல்ட்டாக்கிய பும்ரா மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி லார்ட்ஸ் மைதானத்தின் கௌரவப் பலகையில் தன்னுடைய பெயரை பொன்னெழுத்துக்களால் எழுதினார். அவருடன் சிராஜ் 2, நித்திஷ் ரெட்டி 2, ஜடேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அவர்களது உதவியுடன் இங்கிலாந்தை 387 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக்கியது. இந்தப் போட்டியையும் சேர்த்து வெளிநாட்டு மண்ணில் ஜஸ்ப்ரித் பும்ரா 13* முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 2 விக்கெட்ஸை விட நித்திஷ்இதை செஞ்சது ஆச்சர்யம்.. இந்தியா தொடர்ந்து சான்ஸ் தரனும்.. கும்ப்ளே பாராட்டு
இதன் வாயிலாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை உடைத்துள்ள பும்ரா புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கபில் தேவ் 12 முறை வெளிநாட்டில் 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய இன்றைய சாதனை. அத்துடன் இலங்கையின் முத்தையா முரளிதரனை (10 முறை) முந்தி சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வீரர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் (இருவரும் தலா 11) சாதனையையும் பும்ரா சமன் செய்துள்ளார்.



