
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பிடித்திருந்த ஜிதேஷ் சர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அவர் 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 261 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
தற்போது 31 வயதாகும் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விதர்பா அணிக்காக அறிமுகமாகி கடந்த பல ஆண்டுகளாகவே அந்த அணிக்காக மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது அடுத்த 2025-26 சீசனுக்கு முன்னதாக அவர் விதர்பா அணியிலிருந்து பரோடா அணிக்கு இடம் மாறியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படி இத்தனை ஆண்டுகளாக ஒரு அணிக்காக விளையாடி வந்த அவர் திடீரென பரோடா அணிக்கு இடம் மாறியதற்கு முக்கிய காரணமே ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அவருடன் இடம்பிடித்து விளையாடியிருந்த ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா தான் என்றும் கூறப்படுகிறது. அவரது அறிவுறுத்தலின் படியே ஜிதேஷ் சர்மா அணிமாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏனெனில் தற்போதைய பரோடா அணிக்கு கேப்டனாக இருக்கும் க்ருனால் பாண்டியா அந்த அணியின் அசைக்க முடியாத ஆளுமையாக இருக்கிறார். அவரே ஜிதேஷ் சர்மாவை தனது அணிக்கு அழைத்து வந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வாய்ப்பு வழங்க இருக்கிறார். ஆர்சிபி அணியில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தற்போது பரோடா அணிக்கு ஜிதேஷ் சர்மாவை கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி விதர்பா அணியில் ஜிதேஷ் சர்மாவுக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்காத வேளையில் தற்போது க்ருனால் பாண்டியா அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளையும் வழங்க இருக்கிறார். முதல்தர போட்டிகளில் ஜிதேஷ் சர்மாவுக்கு பரோடா அணியில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதனாலே அவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : பேட்டிங்கில் அசத்தினாலும்.. முக்கியமான விடயத்துல கோட்டை விட்டுட்டாரு.. ஜடேஜாவை விமர்சித்த – மொயின் அலி
கடந்த 10 ஆண்டுகளாக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் 56 லிஸ்ட் ஏ போட்டியிலும், 141 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து இந்திய அணிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் 9 போட்டிகளில் விளையாடி 147 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 100 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இதுவரை 55 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.