ஜூலன் கோஸ்வாமி மீண்டும் உலகசாதனை ! ஆனாலும் இந்திய அணி சந்தித்துள்ள மோசமான நிலை – விவரம் இதோ

Women's World Cup Cup
- Advertisement -

ஐசிசி மகளிர் உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நியூஸிலாந்து நாட்டில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி அன்று துவங்கிய இந்த உலகக்கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலக கோப்பையில் பைனல் உட்பட மொத்தம் 31 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

ICC Women's World Cup 2022

- Advertisement -

நடப்பு சாம்பியனை எதிர்கொண்ட இந்தியா:
இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 2வது போட்டியில் பரிதாப தோல்வியடைந்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் மீண்டெழுந்து 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த உலக கோப்பையில் இந்திய அணி தனது 4வது போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மௌங்கனி நகரில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்றே கூறலாம். ஏனெனில் வழக்கம்போல தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 35 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த டாப் ஆர்டர் வீராங்கனைகளான யஸ்டிகா பாட்டியா 8, மித்தாலி ராஜ் 1, தீப்தி சர்மா 0 என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள்.

Women's World Cup 2022

இந்தியா தோல்வி:
இதனால் 61/4 என திணறிய இந்தியாவிற்கு அடுத்து வந்த இளம் வீராங்கனை ஸ்னே ராணா டக் அவுட்டாகி மீண்டும் அதிர்ச்சி அளித்தார். இதனால் சரிந்த இந்தியாவை நட்சத்திர வீராங்கனை மற்றும் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் காப்பாற்றுவார் என எதிர்பார்த்த வேளையில் 14 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 33 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

மொத்தத்தில் முக்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் ஏற்பட்ட சரிவில் இருந்து கடைசி வரை மீளமுடியாத இந்தியா 36.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அசத்திய சார்லட் டீன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Women's World Cup Cup

அதை தொடர்ந்து 135 என்ற மிகச் சுலபமான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு அதன் வீராங்கனைகள் டம்மி பியூமோண்ட் மற்றும் டேனியல் வைட் ஆகியோரை தலா 1 ரன்களில் அடுத்தடுத்து அவுட் செய்து இந்தியா அதிர்ச்சி கொடுத்தது. இருப்பினும் அந்த அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஹீதர் நைட் 53* (72) ரன்கள் மற்றும் நடாலி ஸ்கிவர் 46 (46) ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார்கள். இறுதியில் 31.2 ஓவர்களில் 136/6 ரன்களை எடுத்த இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தியா சார்பில் வெற்றிக்காக போராடிய மேக்னா சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கோஸ்வாமி உலகசாதனை, வாழ்வா – சாவா நிலையில் இந்தியா:
இப்போட்டியுடன் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றியும் 2 தோல்வியும் சந்தித்துள்ள இந்தியா தற்போது புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலைமையில் இந்தியா இந்த உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இந்த உலக கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

Goswami

தற்போதைய நிலைமையில் இந்த 3 போட்டிகளில் குறைந்தது 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அந்த வகையில் வரும் மார்ச் 19-ஆம் தேதி நடைபெறும் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது மிகவும் கடினம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அதன்பின் நடைபெறும் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் எவ்வித சிரமுமின்றி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக மெகா சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்த – ரிஷப் பண்ட்

முன்னதாக இந்த போட்டியில் ஒரு விக்கெட் எடுத்த இந்திய அனுபவ வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 250 விக்கெட்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். கடந்த 2002 முதல் இப்போது வரை 199 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 250 விக்கெட்டுகளை எடுத்து இந்த அபார சாதனை படைத்துள்ளார். இவரை தவிர உலகில் வேறு எந்த வீராங்கனையும் 200 விக்கெட்களை கூட தொட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement