
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அந்த வெற்றிக்கு அனைத்து வீராங்கனைகளும் முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் செமி ஃபைனலில் 127* ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா இறுதிப்போட்டிக்குச் செல்ல முக்கிய பங்காற்றினார்.
அவருடைய அற்புதமான ஆட்டத்தால் ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. இந்நிலையில் கடந்த வருடம் தம்மை மதத்தை வைத்து கிண்டலடித்தவர்களுக்கு ஜெமிமா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது மும்பையில் உள்ள கார் ஜிம்கானா கிளப் அணிக்காக ஜெமிமா விளையாடி வருகிறார்.
அங்கே உள்ள அலுவலகக் கட்டிடத்தை ஜெமிமாவின் தந்தை இவன் ரோட்ரிக்ஸ் மதமாற்றத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக தனது சகோதரர் மானுவேல் மினிஸ்ட்ரிஸுடன் சேர்ந்து ஜெமிமா தந்தை அங்கே 35 மதமாற்றக் கூட்டங்கள் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அது பற்றி ஒரு ஊழியர் புகார் செய்ததைத் தொடர்ந்து ஜிம்கானா நிர்வாகம் ஜெமிமாவின் உறுப்பினர் அட்டையை இடைகாலமாக ரத்து செய்தது.
அத்துடன் மதத்தை வைத்து ஜெமிமாவை நிஜ வாழ்விலும் சமூக வலைதளங்களிலும் பலரும் கிண்டலடித்தனர். இந்நிலையில் போலியான குற்றச்சாட்டை வைத்து தங்களை கிண்டலடித்தவர்களிடம் கடவுள் இரு மடங்கு கௌரவத்தைப் பெற்றுள்ளதாக ஜெமிமா பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் அது எப்போது நடந்தது என்பது பற்றி எனக்கு நினைவிருக்கிறது”
“அதை எதிர்கொள்வது எனக்கு ஒரு விஷயம். ஆனால் நாங்கள் செய்யாத ஒரு விஷயத்துக்காக என்னுடைய பெற்றோர்கள் அதில் இழுக்கப்பட்டது வேதனையாக இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் செய்த அனைத்தும் விதிமுறைகளின் படி இருந்தன. அதற்கான ஆதாரம் எங்களிடம் இருந்தது. ஆனால் அதை வைத்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எங்களை மிகவும் பாதித்தன”
இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ டெஸ்ட் தொடரில்.. இந்த ஒரு குறை இல்லாம இருந்தா நல்லாருக்கும்.. டு பிளேஸிஸ் ஆதங்கம்
“ஏனெனில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எந்த தவறும் செய்யவில்லை என்று அறிந்திருந்த எங்களுக்கு கடவுளே சாட்சி. எனவே அதை நிரூபிக்க முடியாது என்று நாங்கள் அமைதியாக இருந்தோம். நம்மை காயப்படுத்தியவர்களையும் மன்னிக்க வேண்டும் என்பதே இயேசு கற்றுக்கொடுத்தார். தற்போது கடவுள் எப்படி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியுள்ளார் என்பதை நான் பார்க்கிறேன். கடந்த வருடம் இதே சமயத்தில் நாங்கள் வேதனையுடன் இருந்தோம். தற்போது நாங்கள் சந்தித்த அவமானத்திற்கு கடவுள் இரட்டை மரியாதையைக் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.