அண்டர்-19 உ.கோ வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்ட பரிசுத்தொகை அறிவித்த ஜெய் ஷா – ஸ்பெஷல் விருந்துக்கு அழைப்பு

Jay Shah Womens
- Advertisement -

கடந்த 2000 முதல் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை தொடரால் யுவராஜ் சிங், விராட் கோலி, பிரிதிவி ஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கிடைத்தனர். அதனால் இளம் வீரர்களின் பிறப்பிடமாக உருவெடுத்த அண்டர் 19 உலக கோப்பையை இந்த வருடம் மகளிர் கிரிக்கெட்டிலும் ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி துவங்கிய அத்தொடரில் உலகம் முழுவதிலுமிருந்து 16 அணிகள் பங்கேற்றன. அத்தொடரில் ஏற்கனவே 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி ரசிகர்களின் நெஞ்சங்களின் கவர்ந்த ஷபாலி வர்மா தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து குரூப் டி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அதை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியா ரன்ரேட் உதவியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன்பின் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் ஆடவர் கிரிக்கெட்டிலேயே காலம் காலமாக தோல்வியை பரிசளித்து வரும் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா ஜனவரி 29ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

- Advertisement -

பிரமாண்ட பரிசுத்தொகை:
சென்வஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் ஓவரிலிருந்தே அனல் பறக்க பந்து வீசிய இந்திய வீராங்கனைகளிடம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மெக்டோனால்ட்-கே 19 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ச்சனா தேவி, பர்ஸ்வி சோப்ரா, டைட்டாஸ் சாது ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 69 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷபாலி வர்மா 15, ஸ்வேதா செராவத் 5 என தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் திரிஷா 24 (29) ரன்களும் சௌமியா திவாரி 24* (29) ரன்களும் எடுத்தனர். அதனால் 14 ஓவரிலேயே 69/3 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2023 ஐசிசி மகளிர் அண்டர்-19 டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது. கடந்த 1983லேயே ஆடவர் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற இந்தியா சீனியர் மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை மிதாலி ராஜ் போன்ற நட்சத்திர வீராங்கனைகள் தலைமையில் கூட ஒரு ஐசிசி கோப்பையை வென்றதில்லை.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பை வென்று சரித்திரம் படைத்துள்ள இந்திய அண்டர்-19 அணி ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான சீனியர் அணிக்கே முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது. சொல்லப்போனால் சீனியர் மகளிர் கிரிக்கெட்டில் கூட இதுவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மட்டுமே ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளன. தற்போது இந்த கோப்பையை வென்றுள்ள இந்தியா சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி என்ற பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகள் படைக்காத வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய சரித்திரத்தை எழுதியுள்ள இந்த வெற்றியால் வரும் காலங்களில் இந்திய மகளிர் அணி உலக கோப்பைகளை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் இன்னும் ஆலமரமாக வளர்வதற்கு இந்த வெற்றி ஆழமான விதை போட்டுள்ளது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த சபாலி வர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா 5 கோடி ரூபாய் பரிசாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs NZ : என்னடா பிட்ச் இது? 100 ரன்னுக்கே இப்படி ஒரு போராட்டமா? – மைதானத்தின் தன்மை என்ன?

அது அனைத்து இந்திய வீராங்கனைகள் மற்றும் அவர்கள் வெற்றி காண்பதற்கு உதவியாக இருந்த பயிற்சியாளர் குழுவுக்கும் சமர்ப்பிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெறும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் ஆடவர் 3வது டி20 போட்டியில் நேரடியாக வந்த கலந்து கொள்ளுமாறும் அவர் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஸ்பெஷல் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement