IND vs AUS : 3 சீசனில் 2 கோப்பை, 10 வருடங்கள் கழித்து ஒன்டே கிரிக்கெட்டிலும் மாஸ் கம்பேக் கொடுத்த வைராக்கிய வீரர்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று கோப்பையை தக்க வைத்துள்ளது. அதைத்தொடர்ந்து நடைபெறும் அடுத்த 2 போட்டிகளுக்காக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஜெய்தேவ் உனட்கட் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர் அறிமுக போட்டியில் விக்கெட் எடுக்க தவறிய நிலையில் எஞ்சிய போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அதன் பின் 2013 – 2018 வரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெற்ற கணிசமான வாய்ப்புகளில் சுமாராகவே செயல்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் சமீப காலங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். அதனால் அவருடைய இந்திய கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் தம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வந்த அவர் 2019/20 ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்து சௌராஷ்ட்ரா அணிக்கு கேப்டனாக முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.

- Advertisement -

வைராக்கிய கம்பேக்:
அத்துடன் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் தடுமாறினாலும் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் அசத்திய அவர் 2022 விஜய் ஹசாரே கோப்பையையும் சௌராஷ்டிரா அணிக்கு கேப்டனாக வென்று மீண்டும் சாதனை படைத்தார். அப்படி தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் போராடியதால் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டார். அந்த வாய்ப்பில் அசத்திய அவர் 12 வருடங்கள் கழித்து தன்னுடைய முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்து தன்னுடைய வைராக்கியத்தில் வென்று சாதனை படைத்தார்.

அப்படி தன்னம்பிக்கடன் போராடினால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் அவர் நேற்று நடைபெற்று முடிந்த 2022/23 ரஞ்சி கோப்பையை மீண்டும் சௌராஷ்டிரா அணிக்கு கேப்டனாக வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார். மொத்தத்தில் கடந்த 3 ரஞ்சிக்கோப்பை சீசனில் 2 கோப்பைகளை வென்றுள்ள அவர் 2022 விஜய் ஹசாரே கோப்பையும் வென்று ரசிகர்களால் கொண்டாடப்படாத கேப்டனாகவும் வேகப்பந்து வீச்சாளராகவும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.

- Advertisement -

அந்த கடின உழைப்புக்கு பரிசாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் கழித்து விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 10 வருடங்கள் கழித்து தேர்வாகியுள்ளார். கடந்த 2013 ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2013 நவம்பர் வரை 7 போட்டிகளில் மட்டும் விளையாடினார்.

அதில் 8 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவர் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் மீண்டும் 10 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகியுள்ளார். ஆனால் கடந்த 10 வருடங்களில் தமக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி பெரும்பாலும் அவர் பிசிசிஐ, தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி நிர்வாகத்தை விமர்சிக்கவில்லை. அத்துடன் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பெரும்பாலான ரசிகர்களும் ஆதரவு கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: முதல்முறையாக முகமது ஷமி பவுலிங் பண்றத பார்த்து தோனி என்ன சொன்னாரு தெரியுமா? – இஷாந்த் சர்மா பகிர்ந்த தகவல்

அப்படிப்பட்ட நிலையில் யாரையும் குறை சொல்லாமல் கடுமையாக உழைத்து நம்பிக்கையுடன் போராடிய அவர் 12 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 10 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு முழு தகுதியுடையவர் என்றே கூறலாம். அதனால் அவருடைய வைராக்கியத்தை பாராட்டும் ரசிகர்கள் அடுத்ததாக கிடைக்கும் வாய்ப்புகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தி வருகிறார்கள்.

Advertisement