க்ருனால் பாண்டியா நேற்றைய போட்டியில் பந்துவீசாததற்கு இதுவே காரணம் – மும்பை கோச் வெளியிட்ட தகவல்

Jayawardene

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியானது நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் 219 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய கைரன் பொல்லார்ட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணி, அந்த அணியில் இருக்கும் ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியாவிற்கு ஒரு ஓவர்கூட பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை. மற்றொரு ஸ்பின் பௌலரான ராகுல் சஹாருக்கு மட்டுமே பந்து வீச வாய்ப்பு வழங்கியது.

முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான மஹேலா ஜெயவர்தனாவிடம், க்ருணால் பாண்டியாவிற்கு ஏன் பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயவர்தனே, க்ருணால் பாண்டியா (பிங்கர் ஸ்பின்னர்) விரல்களை உபயோகித்து பந்து வீசக் கூடியவர். டெல்லி மைதானம் மிகச் சிறியது. மேலும் பேட்டிங்கிற்கு மட்டுமே நன்றாக ஒத்துழைக்கும். இதுபோன்ற ஆடுகளங்களில் மனிக்கட்டை உபயோகிப்படுத்தி ஸ்பின் போடும் ரிஸ்ட் பௌலர்களை பந்து வீச வைப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.

krunal 1

எனவே தான் க்ருணால் பாண்டியாவிற்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தை நாங்கள் போட்டிக்கு முன்பே எடுத்துவிட்டோம். இன்றைய போட்டியில் க்ருணால் பாண்டியாவை ஒரு பேட்ஸ்மேனாக தான் நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அதை அவர் நன்றாக செய்வார் என நம்புகிறோம். மேலும் சென்னை வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு ஓவர் வழங்கி ரிஸ்க் எடுக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

- Advertisement -

krunal

இந்தப் போட்டியில் இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவும், குயின்டன் டீ காக்கும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், ஒன்டவுன் ஆர்டரில் களமிறங்கிய சூரிய குமார் யாதவ் சீக்கிரமே அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அவருக்கு பின்பு வந்த க்ரூணால் பாண்டியா 23 பந்துகளில் 32 ரன்கள் அடித்து, தனக்கு வழங்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.