நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்தினை பிடித்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்டுத்தியுள்ளது.
நல்லா விளையாடியும் தோற்பது கஷ்டமா இருக்கு : மஹேலா ஜெயவர்த்தனே
கடந்த ஆண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறிய அவர்கள் இம்முறை மீண்டும் கம்பேக் கொடுக்க முயற்சித்தும் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது இந்த மோசமான செயல்பாடு அந்த அணியின் நிர்வாகத்தின் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் மும்பை அணி தடுமாறி வருவது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் இப்படி மும்பை இந்தியன்ஸ் அணி அடைந்து வரும் தொடர் தோல்விகளுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமை குறித்து பேசியுள்ள அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிக்கோட்டை நெருங்கியும் குறைந்த இடைவெளியில் போட்டியை தவறவிட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இந்த தொடரில் எங்களது ஆட்டம் மிகச் சிறப்பாகவே இருந்து வருகிறது. ஆனாலும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினாலும் அது போதுமானதாக இல்லை.
எங்களுக்கு இரண்டு பிரச்சனைகள் தற்போதைக்கு உள்ளன. ஒன்று பவர்பிளேவில் பேட்டிங் மற்றொன்று பவர் பிளேவில் பவுலிங் இந்த இரண்டுமே தற்போது மோசமாக உள்ளது. பவர் பிளேவில் பந்துவீசும் போது ரன்களை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அதிகமாக ரன்களை வழங்கி விடுகிறோம். அதேபோல் பேட்டிங் செய்யும்போது அதிகளவில் விக்கெட்டை இழந்து விடுகிறோம். இந்த இரண்டும் தான் எங்களது அணியின் சரிவுக்கு காரணம் என ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இதை சரியா செய்யும் தோனி ஏன் ரிட்டையராகனும்.. சிஎஸ்கேவை முடிஞ்சதா எழுதாதீங்க.. வாட்சன் பேட்டி
அவர் கூறியது போலவே கடைசியாக நடைபெற்று முடிந்த பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டியிலும் இறுதிவரை போராடிய மும்பை வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அந்த இரண்டு போட்டியையும் தவற விட்டது குறிப்பிடத்தக்கது.



