
அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (0-2) என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்திய அணிக்கு எவ்வித சர்வதேச போட்டிகளிலும் இல்லாத காரணத்தினால் தற்போது இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர்.
அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் மோதவுள்ள வேளையில் அதற்கு முன்னதாக இருக்கும் ஒருமாத ஓய்வில் உள்ளூர் தொடரான துலீப் டிராபி போட்டிகளில் இந்திய அணியின் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் வற்புறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கப்போகும் அனைத்து வீரர்களும் இந்த துலீப் டிராபி தொடரில் விளையாட இருக்கின்றனர். ஆனால் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் துலீப் டிராபி தொடரில் விளையாடாமல் அவர்களுக்கு பிசிசிஐ மூலம் நேரடியாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை தவிர்த்து மற்ற அனைத்து இந்திய வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர்.
கௌதம் கம்பீர் அனைவரையும் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என்று வற்புறுத்தியபோதும் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு வழங்கியது அவருக்கு சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பி.சி.சி.ஐ-யின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
ஏனெனில் சீனியர் வீரர்களான அவர்கள் காயம் அடைந்தால் அவர்களை இடத்தை நிரப்புவது எளிதல்ல. மற்ற சர்வதேச நாடுகளில் விளையாடும் வெளிநாட்டு அனுபவ வீரர்கள் கூட உள்நாட்டு போட்டிகளில் விளையாட மாட்டார்கள். அந்த வகையில் தான் தற்போது இந்திய அணியின் அனுபவ வீரர்களான அவர்களை உரிய மரியாதையுடன் நாங்கள் நடத்த விரும்புகிறோம், ஒருவேளை அவர்களுக்கு இந்த தொடரில் காயம் ஏற்பட்டு முக்கிய தொடர்களில் பங்குபெற முடியாமல் போனால் அது நமக்கு தான் இழப்பு.
இதையும் படிங்க : அதெல்லாம் பொய்யான செய்தி.. ஐசிசியிடம் உ.கோ நடத்த முடியாதுன்னு சொல்லிட்டேன்.. புதிய ஐபிஎல் பற்றி ஜெய் ஷா
எனவே அவர்களை எங்களால் கட்டாயப்படுத்த முடியாது என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நட்சத்திர வீரர்கள் அனைவரும் உள்ளூர் தொடருக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்று இந்த ஓய்வினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.