ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இதற்கிடையே ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களுக்கு என்று புதிய ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. குறிப்பாக யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, பதான் சகோதரர்கள் போன்ற நிறைய ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுகின்றனர்.
எனவே வெளிநாட்டுக்கு பதிலாக இந்தியாவிலேயே ஐபிஎல் போன்ற ஒரு தொடரை நடத்த உதவுமாறு பிசிசிஐயிடம் அவர்கள் கோரிக்கை வைத்ததாக செய்திகள் தெரிவித்தன. அதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ பரிசீலித்து அடுத்த வருடம் அந்த புதிய ஐபிஎல் தொடரை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனால் சச்சின், சேவாக், யுவராஜ் சிங் போன்ற முன்னாள் வீரர்களை மீண்டும் பார்க்கப் போகிறோம் என்று ரசிகர்களும் ஆவலடைந்தனர்.
ஜெய் ஷா மறுப்பு:
இந்நிலையில் அவை அனைத்தும் போலியான செய்தி என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறுத்துள்ளார். அத்துடன் வங்கதேசத்தில் தற்போது மோசமான அரசியல் நிலைமை நிலவுகிறது. எனவே அங்கு அக்டோபரில் நடைபெற உள்ள 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்தலாம் என்று தம்மிடம் ஐசிசி கேட்டதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.
ஆனால் ஏற்கனவே 2025ஆம் ஆண்டு இந்தியாவில் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அத்துடன் இந்தியாவில் விரைவில் மழை காலம் என்பதால் அதை மறுத்து விட்டதாக ஜெய் ஷா கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பொய்யான செய்தி. அது போன்ற எந்த விஷயத்தையும் நாங்கள் விவாதிக்கவில்லை”
“பிசிசிஐயிடம் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையை அக்டோபர் மாதம் நடத்த முடியுமா என்று ஐசிசி கேட்டது. ஆனால் அதை நான் மறுத்து விட்டேன். ஏனெனில் அடுத்ததாக நாம் மழைக்காலத்தை சந்திப்போம். அதற்கடுத்த வருடம் நாம் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை நடத்த உள்ளோம். எனவே அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த விரும்பவில்லை”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 : ரோஹித்தின் கோரிக்கையை ஏற்று இம்பேக்ட் பிளேயர்.. மெகா ஏலம் நீக்கப்படுமா? ஜெய் ஷா பதில்
“வங்கதேசத்தில் தற்போது புதிய அரசு உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த மாதம் வங்கதேச ஆடவர் அணி டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வரும். ஒருவேளை வரவில்லை என்றால் அவர்களை நான் தொடர்பு கொள்வேன். எங்களுக்கு வங்கதேச தொடர் மிகவும் முக்கியம். அதை நடத்த நாங்கள் முடிந்தளவு முயற்சிப்போம்” என்று கூறினார்.



