
இந்திய கிரிக்கெட் அணி தற்சமயத்தில் சர்வதேச அரங்கில் உலகின் முதன்மை அணியாக செயல்பட்டு வருகிறது. முன்னதாக நவீன யுகத்தில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் பகலிரவு போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரசிகர்களை ஈர்ப்பதற்காக கடந்த 2015 முதல் நடைபெற்று வரும் பகலிரவு போட்டிகளில் பிரத்தியகமான இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுவது வழக்கமாகும்.
அதனால் இரவு நேரத்தில் டெஸ்ட் போட்டிகளை இளஞ்சிவப்பு நிற பந்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்து வருகிறது. ஆனால் அந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்தியா நீண்ட காலம் மறுப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் 2019இல் பிசிசிஐ புதிய தலைவர் – செயலாளராக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி – ஜெய் ஷா ஆகியோர் அந்த நிலைமையை மாற்றினார்கள்.
காரணம் என்ன:
அதனால் 2019ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக இந்தியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வெற்றி கண்டது. ஆனால் அப்போதிலிருந்து கடந்த 5 வருடங்களில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் வெறும் 3 பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள கால சூழ்நிலைகளில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களை தொடுவதில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் மற்றும் ஒளிபரப்பு நிர்வாகங்களுக்கு மிகப்பெரிய பண இழப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். அதனாலேயே இந்தியாவில் பகலிரவு போட்டிகளை பிசிசிஐ அதிகம் நடத்துவதில்லை என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அதை நடத்துவதற்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை. இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் 2 நாட்களில் முடிந்து விடுகிறது. அதன் விளைவாக ரசிகர்கள் தங்களுடைய பணத்தை இழக்கிறார்கள். ஒளிபரப்பாளர்களும் பணத்தை இழக்கின்றனர். எனவே அவர்களுடைய உணர்வுகளை நாம் பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: கம்பீர் பேச்சை கேட்காமல் துலீப் கோப்பையில் விராட், ரோஹித்துக்கு ஓய்வு கொடுத்தது ஏன்? ஜெய் ஷா விளக்கம்
“குறிப்பாக ஒரு ரசிகனாக நீங்கள் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கு பணம் செலுத்தி டிக்கெட் வாங்குகிறீர்கள். ஆனால் அது 2 – 3 நாட்களுக்குள் முடிந்து விடுகிறது. அதனால் ரசிகர்கள் பணத்தை திரும்பப் பெறுவதில்லை. எனவே இந்த விஷயத்தில் நான் சற்று உணர்ச்சி வசப்படுகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் நகரில் இந்தியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.