
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு இம்முறை 20 ஓவர் போட்டிகளாக இந்த ஆசிய கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த குரூப் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும். அதன்பிறகு இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியிலேயே ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஓய்வை அறிவித்து விட்டதால் அவர் இன்றி முதல் முறையாக இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள ஓமன் அணியின் கேப்டன் ஜதீந்தர் சிங் விராட் கோலியை இந்த தொடரில் தவறவிடுவது மிகவும் வருத்தமாக உள்ளதாக நெகிழ்ச்சியான ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். அதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராத் கோலி பாஜியை நாங்கள் இந்த தொடரில் தவறவிடுகிறோம். சர்வதேச டி20 போட்டிகளில் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே விராட் கோலி ஓய்வை அறிவித்து விட்டார். அவருக்கு எதிராக இந்த தொடரில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் அது முடியாமல் போனது. இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு எதிராக விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் ஜதீந்தர் சிங் கூறியுள்ளார். ஓமன் அணியின் கேப்டன் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 1989-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி பஞ்சாபில் பிறந்த ஜதீந்தர் சிங் கடந்த 2003-ஆம் ஆண்டு ஓமன் நாட்டிற்கு குடிபெயர்ந்து அங்கு தனது திறமையை நிரூபித்து தற்போது அந்த அணிக்காக கேப்டனாகவும் மாறியுள்ளார்.
இதையும் படிங்க : எனக்கு என்டே கிடையாது.. ஒருநாள் போட்டிகளுக்கு கம்பேக் கொடுப்பது குறித்து ரோஹித் சர்மா பதிவு – விவரம் இதோ
கடந்த 2015-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் ஓமன் அணிக்காக அறிமுகமான அவர் 2019-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமானார். அதோடு ஓமன் நாட்டிற்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும் அவரே இதுவரை திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.