
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ராவை தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். மிகவும் வித்தியாசமான ஆக்சனை கொண்ட அவர் கடந்த 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர் தற்போது உச்சகட்டத்தை தொட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
அதன் உச்சமாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை 4.17 என்ற துல்லியமான விக்கெட்டுகளை எடுத்த பும்ரா இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினர். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் துல்லியமாக பந்து வீசிய அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் பிட்ச் சிமெண்ட் தார் ரோட் போல ஃபிளாட்டான இருந்தாலும் ஜஸ்ப்ரித் பும்ரா விக்கெட்டுகளை எடுத்து அசத்துவார் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். ஏனெனில் பும்ரா மெதுவான பந்துகளை மிகவும் துல்லியமாக வீசும் திறமையை பெற்றுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். ஆனால் அது போன்ற பிட்ச்களில் உலகின் மற்ற பவுலர்களால் அசத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா சிமெண்ட் பிட்ச்சில் விளையாடினாலும் அவருடைய வித்தியாசமான ஆக்சன் எதிரணி பேட்ஸ்மேன்களை ஏமாற்றும். இது தான் உண்மையாகும். அதனாலயே அவரை நான் பூம் பூம் என்றழைக்கிறேன். மற்ற பவுலர்களிடம் அது போன்ற திறமை இல்லை. மற்ற பவுலர்கள் தங்களுடைய ஃபார்ம் மற்றும் ரிதத்தை சார்ந்திருக்கிறார்கள்”
“ஆனால் பும்ரா அது போன்ற சூழ்நிலையில் கூட விக்கெட்டுகளை எடுப்பார். அவருடைய ஸ்லோயர் பந்துகள் மிகவும் துல்லியமாக இருக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் அவர் லோயர் பந்துகளை பயன்படுத்தியே விக்கெட்டுகளை எடுக்கிறார். அது மிகவும் ஸ்பெஷலானது” என்று கூறினார்.
இதையும் படிங்க: பழைய பெருமை ஜெய்க்காது.. இதுலயும் பஞ்சம் வந்துருக்கு.. பாகிஸ்தான் வீழ்ச்சிக்கான காரணம் பற்றி கங்குலி
அவர் கூறுவது போல கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோதின. அப்போட்டியில் விசாகப்பட்டினம் பிட்ச் ஃபிளாட்டாக இருந்ததால் அஸ்வின், ஜடேஜா போன்ற ஸ்பின்னர்களே விக்கெட்டுகளை எடுக்க தடுமாறினர். ஆனால் அந்த பிட்ச்சில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை துல்லியமான யார்க்கரால் க்ளீன் போல்ட்டாக்கிய பும்ரா 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.