
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் ஐந்தாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கெரத் டிலானி 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து 97 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி 1 (5) ரன்களில் அவுட்டானார். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 52* (37) ரன்கள் குவித்து காயமடைந்து வெளியேறினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் 36* (26) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார்.
ஆட்டநாயகன் பும்ரா:
அதனால் 12.2 ஓவரிலேயே 97/2 ரன்கள் எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அதனால் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளை பெற்ற இந்தியா இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய அயர்லாந்து சார்பில் மார்க் அடைர் 1 விக்கெட் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்த வெற்றிக்கு 3 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 6 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் நியூயார்க் மைதானத்தில் வேகம், பவுன்ஸ் போன்ற அனைத்தும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுத்ததாக பும்ரா தெரிவித்துள்ளார். இது போன்ற சூழ்நிலையில் புகார் செய்யாமல் அசத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பிட்ச் மற்றும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அனைத்திற்கும் தயாராகி வரவேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவிலிருந்து வந்து இங்கே பந்து வீசும் போது பந்து வீச்சாளர்களுக்கு வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கிறது. அதை நான் ஒரு போதும் புகார் சொல்ல மாட்டேன். நீங்கள் செயல் ஊக்கம் உள்ள வீரராக இருக்க வேண்டும். முன்கூட்டியே தயாராக இருக்க முடியாது”
இதையும் படிங்க: டெஸ்ட் அனுபவம் ஹெல்ப் பண்ணுச்சு.. பாகிஸ்தானுக்கு எதிரா இதை செய்யப் போறோம்.. கேப்டன் ரோஹித் பேட்டி
“பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து பின்னர் உங்களுக்கு அதில் என்ன வேலை செய்யும் என்பதை பின்பற்ற வேண்டும். வேகம் சென்றதும் பிட்ச் செட்டிலானது. எனவே நீங்கள் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் பந்து வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த போட்டி நன்றாக அமைந்தது மகிழ்ச்சி” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் பாகிஸ்தானை ஜூன் 9ஆம் தேதி இந்தியா எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.