
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த அவர் அந்த காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு ஐபிஎல் தொடரின் போது தான் கம்பேக் கொடுத்திருந்தார்.
எனவே பும்ராவின் காயத்தை கருத்தில் கொண்டும் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டும் முக்கியமான போட்டிகளில் மட்டுமே அவரை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய அணியின் நிர்வாகம் முடிவு செய்தது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்த சுற்றுப்பயணத்தில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் பயிற்சியாளர் கம்பீரும் பும்ராவின் இருப்பு என்பது இந்திய அணிக்கு மிகவும் அவசியம் என்பதனால் அவரை நாங்கள் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட வைப்போம் என்றும் அதுவும் சரியான நேரத்தில் மட்டுமே அவரை பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் விளையாடி வரும் பும்ரா லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் விளையாடியிருந்த வேளையில் அடுத்ததாக பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வெடுத்துக் கொண்டார்.
பின்னர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் தான் விளையாடுவார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடியே ஆக வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் ஏற்கனவே இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளை பெற்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதால் நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை பும்ரா இல்லாமல் இந்திய அணி நான்காவது போட்டியில் தோற்கும் பட்சத்தில் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி விடும்.
இதையும் படிங்க : ஒன்னுமே இல்லாத பந்தில் அவர் அவுட்டானது தான் இந்திய அணிக்கு தோல்வியை தந்தது – ரவி சாஸ்திரி காட்டம்
அதனால் நான்காவது போட்டியில் விளையாடிவிட்டு இந்திய அணி ஒருவேளை அந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துவிட்டால் அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கலாம். எனவே அந்த வகையில் பார்க்கும்போதும் நான்காவது போட்டியில் பும்ரா விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.