
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்ககிறது. முன்னதாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக திகழும் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தைத் தவிர்த்து பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இத்தொடரில் 3 போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் படி முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்த போதிலும் அவருக்கு 2வது போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் இல்லாமலேயே 2வது போட்டியில் இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றது வேறு கதை. ஆனால் 3வது போட்டியில் விளையாடிய அவர் தொடர்ச்சியாக 6, 7 ஓவர்களுக்கு மேல் வீசவில்லை.
மறுபுறம் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் தேவைப்பட்டால் தொடர்ச்சியாக 10 ஓவர்களைக் கூட போட்டுத் தள்ளுகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே 3 போட்டிகளில் மட்டும் விளையாடும் பும்ரா தொடர்ச்சியாக 5 ஓவர்களுக்கு மேல் வீசாதது சரியற்றது என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். எனவே நாட்டுக்காக ஒரு போட்டியில் களமிறங்கும் போது வரைமுறையின்றி பங்காற்ற வேண்டும் என்று அவர் பும்ராவை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி பதான் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக நீங்கள் கிரிக்கெட்டில் விளையாடும் போது உங்களுடைய அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். 5 ஓவர் கொண்ட ஸ்பெல்லை வீசுகையில், ஜோ ரூட் வரும் போது 5 ஓவர்களை வீசி விட்டால், 6வது ஓவரை வீசமாட்டேன் என்று சொல்லக்கூடாது. ஒன்று நாட்டுக்காக எல்லாவற்றையும் கொடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்”
“நாட்டுக்காக, அணிக்காக வரும் போது நீங்கள் தேவையானவற்றை செய்ய வேண்டும். நாடு தான் எப்போதும் முக்கியம். அணிக்காக விளையாடும் போது நீங்கள் சக வீரர்களுக்காகவும் விளையாடுகிறீர்கள். அவர்களுக்காகவும் நீங்கள் உங்களுடைய அனைத்தையும் கொடுக்க விரும்புவீர்கள். உங்களுடைய அணிக்காக விளையாடுவதே உங்களது மிகப்பெரிய பொறுப்பாகும்”
இதையும் படிங்க: இந்தியா மாதிரி ஆசிய நாடுகளுக்கு ஒரு நியாயமா? பொது அறிவிருந்தா அதை மாத்துங்க.. ஐசிசியை விமர்சித்த ஸ்டோக்ஸ்
“உங்களுடைய அணி தான் முக்கியமானது. எனவே அதற்காக நீங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும். பும்ரா முயற்சியைப் போடுகிறாரா? என்று நான் கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் தேவையான முயற்சிகளைப் போடுகிறார். தன்னுடைய ஓவர்களை பவுலிங் செய்கிறார். ஆனால் அணிக்காக எக்ஸ்ட்ராவாக தேவைப்படும் போது நீங்கள் அதைக் கொடுத்தாக வேண்டும். அது போன்ற சமயத்தில் நீங்கள் உங்களுடைய பணிச்சுமையைத் தள்ளி வைக்க வேண்டும். அதுவே என்னுடைய நம்பிக்கையாகும்” என்று கூறினார்