இப்டி நடக்கும்னு அப்போவே தெரியும், இலங்கை தொடரிலிருந்து திடீரென வெளியேறிய நட்சத்திர வீரர் – ரசிகர்கள் கோபம்

Team India Jasprit Bumrah
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. குறிப்பாக 2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் டி20 தொடரில் ஓய்வெடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடுகிறது. முன்னதாக கடந்த வருடம் இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய அழுத்தமான பெரிய தொடர்களில் சொதப்பலாக செயல்பட்டு தோல்வியை சந்தித்தது.

அதற்கு கேப்டன் ரோகித் சர்மா உட்பட முதன்மை வீரர்கள் முக்கிய தொடர்களில் காயத்தால் வெளியேறியதுடன் பணிச் சுமையால் ஓய்வெடுத்துக் கொண்டு தொடர்ந்து ஒன்றாக இணைந்து விளையாடாமல் இருந்ததே முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் 2023 உலகக் கோப்பை வெல்ல வேண்டுமெனில் முதலில் ரோகித் சர்மா தலைமையில் அத்தொடரில் விளையாடப் போகும் அனைத்து வீரர்களும் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் இணைந்து விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீர் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

மீண்டும் வெளியேற்றம்:
அந்த நிலைமையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்ததால் உடனடியாக இந்த இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று கடந்த வாரம் பிசிசிஐ அறிவித்தது. கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய ஒருநாள் தொடரின் போது காயத்தை சந்தித்த அவர் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் விளையாடாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர் அதிலிருந்து குணமடைந்த அவர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் ஒரு சில போட்டிகளில் விளையாடிய பின் மீண்டும் காயமடைந்து 2022 டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் வெளியேறினார்.

அதுவும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் மீண்டும் அவசரமாக களமிறங்கி காயத்தை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக இந்த இலங்கை ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு. “இலங்கைக்கு எதிராக அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் உமரா விலகுகிறார்”

- Advertisement -

“குறிப்பாக கௌகாத்தியில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியில் இணைய காத்திருந்த அவருக்கு முழுமையாக பந்து வீசுவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. அதனால் முன்னெச்சரிக்கை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கான மாற்று வீரரை இந்திய தேர்வுக்குழு அறிவிக்கவில்லை” எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்பால் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். ஏனெனில் அவர் முழுமையாக குணமடைவதற்கு 6 மாதங்கள் தேவைப்படும் என்று காயமடைந்த போது செய்திகள் வெளியானது.

அதனால் 2023 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத்தான் பும்ரா வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முன்கூட்டியே இந்திய அணிக்கு திரும்பியது ஆச்சரியமாக அமைந்தது. ஆனால் தற்போது இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதற்காக வெளியேறுகிறார் என்று பிசிசிஐ அறிவித்ததை பார்க்கும் ரசிகர்கள் இதற்கு ஏன் இந்த நாடகம்? அதற்கு ஆரம்பத்திலேயே முழுமையாக குணமடைந்த பின் அணியில் சேர்வார் என்று அறிவித்திருக்கலாமே? என்று கோபத்தை வெளிப்படுத்திகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs SL : முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

மேலும் நாளை முதல் போட்டி துவங்கும் நிலையில் தற்போது வெளியேறியுள்ள அவருக்கு நாட்டுக்காக விளையாடுவதென்றால் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறுவது புதிதா? என்றும் ரசிகர்கள் பும்ராவை விளாசுகிறார்கள். அத்துடன் பொறுமையாக குணமடைந்து ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுங்கள் பும்ரா என்பதே இந்த செய்தியை பார்க்கும் அனைத்து இந்திய ரசிகர்களின் பிரதிபலிப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement