இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த தொடரின் நான்காவது போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்க உள்ளது. அந்த போட்டியில் நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் என்று செய்திகள் வெளி வந்தன. தற்போது அந்த செய்தியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
பும்ராவுக்கு ஓய்வு:
குறிப்பாக 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் பும்ரா தொடர்ச்சியாக விளையாடி வருவதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ராஞ்சியில் நடைபெறும் நான்காவது போட்டியில் மட்டும் ஓய்வு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த அறிவிப்பு இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.
ஏனெனில் இந்த தொடரில் முதல் 3 போட்டிகளில் முகேஷ் குமார், முகமது சிராஜ் போன்ற மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக பும்ரா மட்டும் ஃபிளாட்டான பிட்ச்சில் கூட அட்டகாசமாக பந்து வீசி ஓலி போப், பென் ஸ்டோக்ஸ் போன்ற தரமான இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை பறக்க விட்டு இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வந்தார்.
அந்த வகையில் நன்றாக வீசி வந்த ஒரே ஒரு பவுலருக்கும் இப்படி ஓய்வு கொடுத்து விட்டீர்களே என்று ரசிகர்கள் பிசிசிஐ மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பும்ராவுக்கு பதிலாக ராஜ்கோட் போட்டியில் விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார் ராஞ்சியில் நடைபெறும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒருவேளை 4 ஆவது போட்டியில் அஷ்வினுக்கு ஓய்வு வழங்கப்பட்டால் அவரது இடத்தில் – விளையாடப்போவது யார்?
ஆனால் காயத்தால் கடந்த போட்டியில் விளையாடாத நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிய வருகிறது. அதனால் நான்காவது போட்டியில் கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அத்துடன் ஐந்தாவது போட்டியிலும் ராகுல் காயத்தை பொருத்தே விளையாடுவார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. எனவே நான்காவது போட்டியில் மீண்டும் சர்பராஸ் கான், ரஜத் படிடார் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.