253 ரன்ஸ்.. இப்படி போட்டா எப்படி.. ஸ்டோக்ஸை நிராயுதபாணியாக்கி.. இங்கிலாந்தை சுருட்டிய பும்ரா

Bumrah vs Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா கடுமையாக போராடி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் சேர்த்து அசத்தியது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் 35 ரன்கள் கூட எடுக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் சேர்த்து துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர், ரீகன் அஹ்மத், ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

பும்ரா அபாரம்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் டுக்கெட் 21 (17) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து அரை சதமடித்து இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்த ஜாக் கிராவ்லி 76 (78) ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அந்த நிலைமையில் வந்த ஜோ ரூட்டை 5 ரன்களில் காலி செய்த பும்ரா மறுபுறம் நங்கூரத்தை போட முயற்சிக்க ஓலி போப்பை 23 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.

குறிப்பாக கடந்த போட்டியில் 196 ரன்கள் அடித்து தோல்வியை கொடுத்த அவருடைய 3 ஸ்டம்புகளையும் பறக்க விட்ட பும்ரா அடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோவையும் 25 ரன்களில் தன்னுடைய அதிரடியான வேகத்தால் வீழ்த்தினார். அதனால் 159/5 என சரிந்த இங்கிலாந்தை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்தார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த பென் ஃபோக்ஸை 6 ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் அடுத்ததாக வந்த ரீகன் அகமதையும் 6 ரன்களில் காலி செய்தார். இருப்பினும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் அடித்து அரை சதத்தை தொடுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அப்போது மீண்டும் துல்லியமான யார்க்கர் பும்ரா அவரை கிளீன் போல்ட்டாக்கினார்.

இதையும் படிங்க: தோல்வியை கொடுத்த இங்கிலாந்து வீரரின்.. 3 ஸ்டம்ப்பையும் தெறிக்க விட்ட பும்ரா.. தேநீரில் முன்னிலை யார்?

அதற்கு பதில் சொல்ல முடியாமல் கிளீன் போல்டான பென் ஸ்டோக்ஸ் தம்முடைய கையிலிருந்த பேட்டை கீழே விட்டு நிராயுதபாணியாக “இப்படி போட்டால் எப்படி அடிக்கிறது” என்பது போல் ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டே ஏமாற்றத்துடன் வெளியேறினார். இறுதியில் டாம் ஹார்ட்லி 21, ஆண்டர்சன் 6 ரன்களில் காலி செய்த பும்ரா மொத்தம் 6 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்தை 253 ரன்களுக்கு சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றினார். அவருடன் குல்தீப் யாதவ் 3 விக்கெட்கள் எடுத்ததால் இந்தியா 143 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

Advertisement