
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவது அவசியமாகிறது.
ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் அவர் கடந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் சிம்ம சொப்பனமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்குப் போராடினார். அத்தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார். அதனால் மீண்டும் 5 போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் பும்ரா காயத்தை சந்திப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
எனவே இங்கிலாந்தில் அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்தார். அதை தொடர் துவங்குவதற்கு முன்பாக பும்ராவும் உறுதி செய்திருந்தார். இந்த சூழ்நிலையில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை 465 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா 6 ரன்களை முன்னிலையாகப் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் இந்தியாவை விட இங்கிலாந்தில் அதிக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதாக கூறியுள்ளார். இதே போன்ற சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் 3க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடுவேன் என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே கால சூழ்நிலைகள் நல்ல உணர்வைக் கொடுக்கிறது. அது இந்தியாவை விட கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கிறது. அதன் காரணமாக நான் புத்துணர்ச்சியாகவும் நன்றாகவும் உணர்கிறேன். எனவே இங்கிருந்து நல்ல விஷயங்கள் பின்தொடரும் என்று நம்புகிறேன். நாங்கள் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்”
இதையும் படிங்க: சின்ன பசங்க தான.. போக போக கத்துப்பாங்க.. ஜெய்ஸ்வால் செய்த தவறு குறித்து – பெருந்தன்மையாக பேசிய பும்ரா
“எங்களுடைய சில பவுலர்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் விளையாடுகிறார்கள். எனவே புதிய பவுலர்கால் தங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ள நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். நாங்கள் அவர்களுக்கு அனுபவத்தைப் பகிர்கிறோம். எனவே அவர்கள் மெதுவாக கற்றுக் கொள்வார்கள். தற்சமயத்தில் முடிந்தளவுக்கு அதிக ரன்கள் அடிப்பதே எங்களுடைய இலக்காகும்” என்று கூறினார்.