இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் பண்ட் ஆகியோர் சதம் அடித்து அசத்தியிருந்தனர்.
ஜெய்ஸ்வாலை கடிந்து கொள்ளாமல் தன்மையாக பேசிய பும்ரா :
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 465 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் காரணமாக 6 ரன்கள் முன்னிலையுடன் தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெடுகளை இழந்து 90 ரன்கள் குவித்திருந்தது.
இவ்வேளையில் இன்றைய போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய பும்ரா 83 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இப்படி அவர் ஐந்து விக்கெட்டை கைப்பற்றி அசத்தி இருந்தாலும் அவருடைய பந்துவீச்சில் நான்கு எளிய கேட்ச்களை இந்திய அணியின் வீரர்கள் கோட்டை விட்டனர். இல்லையென்றால் பும்ரா 9 விக்கெட்டுகளை கூட எடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அவருடைய பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் மூன்று முறையும், ரவீந்திர ஜடேஜா ஒரு முறையும் கேட்சை தவறவிட்டனர். இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது தனது பந்துவீச்சில் தொடர்ச்சியாக கேட்ச் விட்ட ஜெய்ஸ்வால் குறித்து பும்ரா பேசுகையில் கூறியதாவது :
அவர் கேட்ச் விட்டதற்காக உட்கார்ந்து அழுது கொண்டிருக்க முடியாது. ஆட்டத்தில் இதெல்லாம் நடப்பது மிக சகஜம் தான். எனவே போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மட்டுமே யோசிக்கிறேன். தவறவிடப்பட்ட வாய்ப்புகள் குறித்து நான் அதிகம் யோசித்து பார்க்கக் கூடியவன் கிடையாது. யாருமே வேண்டுமென்று கேட்சை தவற விடுவதும் கிடையாது.
இதையும் படிங்க : ஷேன் வார்னே மாதிரி இதை செய்யும் ஜீனியஸ் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மூனே போதும்.. நாசர் ஹுசைன் பாராட்டு
தற்போதைய இந்திய அணியில் உள்ள பலவீரர்கள் இளம் வீரர்கள். அவர்களும் கடினமாக உழைக்கத்தான் செய்கிறார்கள். படிப்படியாக கிடைக்கும் அனுபவங்களில் இருந்து அவர்கள் அனைத்தையும் கற்றுக்கொள்வார்கள் என பெருந்தன்மையுடன் பும்ரா பேசியது குறிப்பிடத்தக்கது.



