இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து எஞ்சிய போட்டியில் சிறிய இடைவெளிக்கு பிறகு நடைபெற இருக்கிறது.
அந்தவகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருப்பதினால் தற்போது பத்து நாட்கள் இடைவெளி இரு அணிகளுக்குமே கிடைத்துள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் முதல் இரண்டு போட்டிகளை தவிர்த்து மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் இன்னும் சில தினங்களில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி பிரத்யேகமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் அந்த அணியில் விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. அதே வேளையில் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக அணியில் இணைய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு ஓய்வு அளிக்க முடிவு செய்து அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏனெனில் இது ஒரு நீண்ட தொடர் என்பதனாலும் ஏற்கனவே அவர் இரண்டு போட்டியில் விளையாடிவிட்டதால் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அவசியம் என்பதற்காகவே பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்றாவது போட்டியில் மட்டும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரொம்ப நன்றி சார்.. இரட்டை சதத்துக்கு சச்சின் தெரிவித்த வாழ்த்து பற்றி பகிர்ந்த ஜெய்ஸ்வால்
அதனைத்தொடர்ந்து கடைசி இரண்டு போட்டிகளுக்கு அவரை பயன்படுத்தலாம் என்று தேர்வுக்குழுவினர் நினைப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் முகேஷ் குமார் மற்றும் சிராஜ் ஆகியோரே வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.