
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருவதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவ்வப்போது அவருக்கு இந்திய அணியின் நிர்வாகம் ஓய்வினை வழங்கி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பும்ரா இந்த தொடரில் 5 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் இந்திய அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளார். இந்த தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார் என்பதை ஏற்கனவே தெரிவித்த நிர்வாகம் எந்தெந்த போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று அறிவிக்கவில்லை. நடைபெற்று முடிந்த லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றாலும் இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் அவரே பந்து வீசியிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டனில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட மாட்டார் என்றும் அவருக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியின் போதே அவர் 44 ஓவர்களை வீசிவிட்டார் என்பதனால் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் சிறிய அளவிலான இடைவெளியே இருப்பதினால் அவர் மூன்றாவது போட்டிக்கு திரும்பும் வகையில் இந்த இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சாய் சுதர்சரன் நீக்கம்.. 3 ஆவது இடத்தில் கருண் நாயர்.. அப்போ 6 ஆவது இடத்தில் யார்? – விவரம் இதோ
அப்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுத்துக்கொண்டு மூன்றாம் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடும் பட்சத்தில் நான்காவது போட்டியில் மீண்டும் ஓய்வெடுத்து கொண்டு கடைசி ஐந்தாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.