டி20 உ.கோ-யில் பேட்ஸ்மேன்களின் பாதங்களை அவர் உடைக்க போறாரு – இந்திய பவுலரை பாராட்டிய டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. நாக்பூரில் மழையால் 8 ஓவர்களாக நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயித்த 91 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். ஆனாலும் மறுபுறம் நின்ற கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46* (20) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

முன்னதாக மொஹாலியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 209 ரன்கள் இலக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ராவின் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த நிலைமையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேரிட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து இப்போட்டியில் இந்திய அணிக்கு திரும்பி சிறப்பாக பந்து வீசினார். அதிலும் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக பேட்டிங் செய்து மிரட்டிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சை துல்லியமான யார்க்கர் பந்தால் அவர் க்ளீன் போல்ட்டாக்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

கால்கள் ஜாக்கிரதை:
அந்தளவுக்கு துல்லியமான யார்கர் பந்தை வீசி தம்மை அவுட் செய்த ஜஸ்பிரித் பும்ராவை அவுட்டானதும் ஆரோன் பின்ச் வெளிப்படையாகவே தனது பேட்டில் தட்டி பாராட்டினார். அதுபோக அதே போன்ற யார்கர் பந்தில் ஆஸ்திரேலியாவின் மற்றொரு நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் நிற்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த வகையில் 2 ஓவரில் 1 விக்கெட் எடுத்து 23 ரன்களை கொடுத்தாலும் கம்பேக்கில் மிரட்டலாக பந்து வீசிய பும்ரா தனது பலமான யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தது இந்திய வேகப்பந்து வீச்சுக்கு பலத்தை சேர்த்தது.

ஏனெனில் அவரைப்போலவே காயத்திலிருந்து குணமடைந்து வீசிய ஹர்ஷல் படேல் மீண்டும் அவரை விட மோசமாக 2 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 32 ரன்களை வாரி வழங்கினார். அந்த வகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அவர் திரும்பியதும் இந்தியாவை நோக்கி வெற்றியும் திரும்பியுள்ளது. இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ள ஜஸ்பிரித் பும்ரா வரும் டி20 உலக கோப்பையில் எதிரணி பேட்ஸ்மேன்களின் பாதங்களை பதம் பார்க்கப் போவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

கம்பேக் போட்டியில் அவரது அற்புதமான பந்து வீச்சை பாராட்டிய அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா பழைய தடத்தில் திரும்பியுள்ளார். அவர் சிறந்த ஃபார்மில் இருப்பதாக தோன்றுவதால் எதிரணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தன்னுடைய பந்து வீச்சை அவர் வைடாக தொடங்கினாலும் அது 140 கி.மீ வேகத்தில் இருந்தது. அதன்பின் அவர் ஆரோன் பின்ச்சை அபாரமான யார்கர் பந்தால் போல்ட்டாக்கினார்”

“அந்தளவுக்கு அற்புதமாக பந்து வீசிய அவரைப்பார்த்து பின்ச் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் பாராட்டினார். அந்த வகையில் காயத்திலிருந்து களமிறங்கிய முதல் போட்டியிலேயே கம்பேக் கொடுப்பது எளிதானதல்ல. அவர் அழுத்தத்தில் மிகச்சிறந்த ஸ்பெல் வீசினார். அவர் டி20 உலக கோப்பையில் பேட்ஸ்மேன்களின் பாதங்களை உடைக்கப் போகிறார்” என்று கூறினார்.

- Advertisement -

மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய 2வது போட்டியிலும் படுமோசமாக செயல்பட்ட ஹர்ஷல் படேல் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஹர்ஷல் படேல் சிறந்த கம்பேக் கொடுக்கவில்லை. கடந்த போட்டியைப் போலவே இப்போட்டியிலும் அவர் அதிகப்படியான ரன்களை வழங்கினார். ஈரப்பதமான கால சூழ்நிலையால் பந்து ஈரமாக இருந்தது உண்மைதான். ஆனால் அதற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நீங்கள் அதை ஒரு சாக்காக சொல்ல முடியாது” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியா மாதிரி பெரிய பிட்ச்களில் விளையாட நிச்சயம் இந்திய அணிக்கு அவர் தேவை – மேத்யூ ஹைடன் கருத்து

முன்னதாக நேற்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படாத நிலையில் ஹர்ஷல் படேல் மீண்டும் ரன்களை வாரி வழங்கியதால் டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவை தவிர எஞ்சிய வேகப்பந்து வீச்சாளர்கள் திணறுவது இந்திய ரசிகர்களுக்கு இப்போதும் கவலையாக அமைந்துள்ளது.

Advertisement