IND vs IRE : சுரேஷ் ரெய்னாவின் 13 வருட சாதனை சமன், பழைய பன்னீர்செல்வமாக கம்பேக் கொடுத்துள்ள பும்ரா – ரசிகர்கள் மகிழ்ச்சி

- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது. 2023 உலக கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட இத்தொடரில் காயத்திலிருந்து குணமடைந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக தலைமை தாங்கினார். அவரது தலைமையில் ருதுராஜ், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2வது போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

Bumrah

- Advertisement -

இருப்பினும் இறுதிப்போட்டி மொத்தமாக மழையால் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் கோப்பையை வென்ற இந்தியா சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்தது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேப்டனாக களமிறங்கிய பும்ரா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்தும் முதல் பவுலர் என்ற சாதனை படைத்தார்.

பும்ராவின் கம்பேக்:
அதில் முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி முக்கிய பங்காற்றிய அவர் தன்னுடைய அறிமுக டி20 போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். அதே போல 2வது போட்டியிலும் 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்திய அவர் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியின் முக்கிய பங்காற்றியதால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Jasprit Bumrah 2

அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அறிமுக தொடரிலேயே தொடர் நாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் என்ற சுரேஷ் ரெய்னாவின் 13 வருட சாதனையையும் பும்ரா சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2010ஆம் ஆண்டு கத்துக்குட்டியான ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் எம்எஸ் தோனி ஓய்வெடுத்த நிலையில் இந்தியாவை வழி நடத்திய சுரேஷ் ரெய்னா அபாரமாக செயல்பட்டு வெற்றியில் முக்கிய பங்காற்றி தம்முடைய அறிமுக டி20 தொடரிலேயே தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்.

- Advertisement -

தற்போது அந்த சாதனையை சமன் செய்துள்ள பும்ரா காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து பழைய பன்னீர்செல்வமாக கம்பேக் கொடுத்துள்ளேன் என்பதை நிரூபிக்கும் வகையில் இத்தொடரில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். மேலும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டு எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமையை கொண்ட அவர் 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

Bumrah

இதையும் படிங்க:அவர மட்டும் ஏன் பாராட்டுறீங்க? ஜஹீர் கான், யுவி, ரெய்னாலாம் உங்க கண்ணுக்கு தெரியலயா – நேரலையில் கொந்தளித்த கம்பீர்

குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையான அவர் இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோல்வியை கொடுத்தது. தற்போது அவர் முழுமையாக குணமடைந்து ஃபார்முக்கு திரும்பியுள்ளது 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் இந்தியாவுக்கு பலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement