இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கிய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான 62 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லியை 15 ரன்களில் அவுட்டாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை படைத்தார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் பென் டக்கட் இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் 88 பந்துகளில் சதமடித்தார்.
போராடும் இந்தியா:
அவருடன் எதிர்புறம் விளையாடிய ஓலி போப் 39 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஜோ ரூட் நிதானமாக விளையாட முயற்சித்தார். ஆனால் பும்ராவின் நாற்பதாவது ஓவரின் ஐந்தாவது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து சிக்ஸர் அடிக்கிறேன் என்ற பெயரில் தேவையின்றி குருட்டுத்தனமான ஷாட்டை அடித்த அவர் ஜெயிஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்களில் பரிதாபமாக அவுட்டானார்.
மறுபுறம் சிக்ஸர் அடிக்க முடியாத அளவுக்கு சிறப்பாக பந்து வீசி விக்கெட்டை எடுத்த பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட்டை அதிக முறை அவுட்டாக்கிய 2வது பவுலர் என்ற ஜோஸ் ஹேசல்வுட் சாதனையை சமன் செய்தார். சொல்லப்போனால் அவரை விட மிகவும் வேகமாக வெறும் 29 இன்னிங்ஸில் ஜோ ரூட்டை 13 முறை பும்ரா அவுட்டாகியுள்ளார். அந்த பட்டியல்:
1. பட் கமின்ஸ் : 14 (39 இன்னிங்ஸ்)
2. ஜஸ்பிரித் பும்ரா : 13 (29)*
3. ஜோஸ் ஹேசல்வுட் (42)
4. ட்ரெண்ட் போல்ட் : 12 (34)
அந்த நிலையில் வந்த ஜானி பேர்ஸ்டோவை டக் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 23 பவுண்டரி 2 சிக்ஸருடன் 153 (151) ரன்கள் குவித்த பென் டக்கட்டையும் ஒரு வழியாக காலி செய்து இந்திய ரசிகர்களை நிம்மதியடைய வைத்தார். அதனால் திடீரென சரிந்த இங்கிலாந்துக்கு அடுத்ததாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39*, பென் போக்ஸ் 6* ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அஸ்வின் இல்லாத பொறுப்பில் நீங்க தான் ஜெயிக்க வைக்கணும்.. இந்திய வீரருக்கு கும்ப்ளே அறிவுரை
அதனால் இரண்டாவது நாள் உணவு இடைவெளியில் இங்கிலாந்து 290/5 ரன்கள் எடுத்து இன்னும் இந்தியாவை விட 155 ரன்கள் பின்தங்கியுள்ளது. மறுபுறம் அஸ்வின் பாதியிலேயே வெளியேறியதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா முடிந்தளவுக்கு இங்கிலாந்தை 400 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது.