அதை செய்யலனா பும்ரா கண்டிப்பாக காயமடைவார் – அன்றே கணித்த பாக் ஜாம்பவானின் வைரல் வீடியோ

Bumrah
- Advertisement -

விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இறுதி கட்டமாக தயாராகி வரும் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. திருவனந்தபுரத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் பங்கேற்காத நிலையில் முதுகுப் பகுதியில் சந்தித்த எலும்பு முறிவு காரணமாக தென்னாப்பிரிக்க தொடர் மட்டுமல்லாது உலகக் கோப்பையிலிருந்தும் விலகுவதாக நேற்று செய்திகள் வெளியானது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அவதரித்த அவர் தனது வித்யாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே, மிடில், டெத் ஓவர் என அனைத்து வகையான சூழ்நிலையிலும் கச்சிதமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து போட்டியை மாற்றக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் விலகியது இந்தியாவின் உலகக் கோப்பை கனவையும் உடைத்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் வெறும் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே பந்துவீச கூடியவர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர்.

- Advertisement -

அன்றே கணித்த அக்தர்:
அதனால் முழுமையாக நம்பியிருந்த பும்ரா விலகியது உண்மையாகவே மிகப்பெரிய பின்னடைவாகும். அதைவிட முதுகுப் பகுதியில் காயமடைந்துள்ள அவருக்கு குணமடைய 6 மாதங்கள் தேவைப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது மேலும் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி நேற்று வந்ததுமே பும்ராவின் பவுலிங் ஆக்சன் உடலை உடைத்துக் கொள்ளும் வகையில் கடினமாக இருப்பதால் விரைவில் அதை அவர் மாற்றினால் மட்டுமே காயத்திலிருந்து தப்பி நீண்டகாலம் விளையாட முடியும் என கடந்த வருடமே முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகிலேயே அதிவேகமான பந்து வீசுவதற்கு கடினமான பயிற்சிகளை எடுத்து ஏராளமான காயங்களை சந்தித்த அவர் அவ்வளவு வேகத்தில் வீசியதால் ஓய்வு பெற்று பல வருடங்கள் கழித்து தற்போது வலியை உணர்வதாலும் காலை நேரத்தில் நடக்க முடியவில்லை என்பதாலும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அந்த வகையில் ஃபாஸ்ட் பவுலிங் ஆக்சனை பற்றி கரைத்துக் குடித்த அவர் பும்ராவை பற்றி பேசியது பின்வருமாறு. “அவருடைய (பும்ரா) பவுலிங் முன்பக்க ஆக்சனை கொண்டது. அந்த வகையான ஆக்ஷனை கொண்ட வீரர்கள் தங்களது தோள்பட்டை மற்றும் முதுகை பயன்படுத்திதான் பந்து வீச முடியும். ஆனால் எங்களைப்போன்ற பவுலர்கள் பக்கவாட்டிலிருந்து பந்து வீசுவதால் ஏற்படும் அழுத்தத்தை ஈடுசெய்ய முடியும்”

- Advertisement -

“இருப்பினும் பும்ராவை போன்ற முன்பக்க ஆக்சனுடன் பந்து வீசினால் அந்த அழுத்தத்தை ஈடு செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அந்த செயலின் போது முதுகை பயன்படுத்த வேண்டியுள்ளதால் நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் காயத்திலிருந்து தப்ப முடியாது. அந்த வகையான முன்பக்க ஆக்சனுடன் இயன் பிஷப், ஷேன் பாண்ட் ஆகியோர் தடுமாறியதை நான் பார்த்துள்ளேன். எனவே “முக்கிய போட்டியில் விளையாடி விட்டோம், நம்மை நிர்வகிப்பதற்காக ஓய்வெடுக்க செல்வோம்” என்ற வழியில் பும்ரா இப்போது சிந்திக்க வேண்டும். அதாவது அவர் தனது பணிகளை நிர்வகிக்க வேண்டும்”

“மாறாக அவரை ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் விளையாட வைத்தால் அவர் ஒரு வருடத்தில் முற்றிலும் உடைந்து விடுவார். அதனால் 5இல் 3 போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு அவரை உட்கார வையுங்கள். பும்ரா என்றென்றும் நிலைத்து விளையாட விரும்பினால் இந்த ஒரு விஷயத்தை நிர்வகிக்க வேண்டும்” என்று கடந்த வருடமே அக்தர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : லவ்வருடன் டேட்டிங் போகனும் ரூ300 குடுங்க. கமெண்ட் மூலம் உதவி கேட்ட ரசிகர் – அமித் மிஸ்ரா குடுத்த சர்ப்ரைஸ்

அதாவது ஒன்று பவுலிங் ஆக்சனை மாற்ற வேண்டும் அல்லது 5இல் 3 போட்டிகள் என்ற வகையில் விளையாடி விட்டு எஞ்சிய போட்டிகளில் ஓய்வெடுத்து பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அப்படி செய்தால் மட்டுமே 3 வகையான கிரிக்கெட்டிலும் கடைசி வரை காயங்கள் இல்லாமல் விளையாட முடியும் என அன்றே அக்தர் கணித்தது இன்று நிஜமாகியுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைகிறார்கள்.

Advertisement