நாட்டை விட ஐபிஎல் பணமே முக்கியம், டி20க்காக இங்கிலாந்து அணிலிருந்து வெளியேறும் நட்சத்திர வீரர் – ரசிகர்கள் அதிருப்தி

roy 1
Advertisement

சர்வதேச அரங்கில் வருங்கால நட்சத்திரங்களை கண்டறிந்து கொடுக்கும் நோக்கத்தில் கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் தரமான வீரர்களை அடையாளப்படுத்தி வருகிறது. இருப்பினும் கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ள ஐபிஎல் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைக்கு நிகராக தரத்தை கொண்டிருப்பதுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை பணமாக கொட்டுகிறது. அதனால் ஐசிசியை மிஞ்சி பணக்கார வாரியமாக உருவெடுத்துள்ள பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது.

எடுத்துக்காட்டாக கடந்த வருடம் 10 அணிகளுடன் 74 போட்டிகளாக விரிவு படுத்தப்பட்ட ஐபிஎல் வரும் காலங்களில் 84, 94 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக மேலும் விரிவடைய உள்ளது. இதனால் சர்வதேச போட்டியின் எண்ணிக்கையும் தரமும் குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது பல வல்லுனர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதை விட 90களில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற வெறியுடன் வளர்ந்த வீரர்கள் தங்களது தேசிய அணிக்காக வருடம் முழுவதும் விளையாடினாலும் ஒரு கோடியை சம்பளமாக பார்க்க மாட்டார்கள்.

- Advertisement -

வெளியேறும் வீரர்:
ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 2 மாதமும் விளையாடுவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீரர்கள் தாய்நாட்டைப் புறக்கணித்து ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். மேலும் ஐபிஎல் போலவே அதில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் இன்று மேலும் பணக்காரர்களாக அவதரித்து தென்னாபிரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளில் தங்களுடைய கிளை அணைகளை வாங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் கிரிக்கெட் மிகவும் பிரபலம் இல்லாத அமெரிக்காவில் புதிதாக மேஜர் லீக் டி20 தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற ஐபிஎல் அணிகள் தங்களுடைய கிளைகளை வாங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க்காவில் கொல்கத்தா நிர்வகிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 300000 பவுண்ட்ஸ் விலைமதிப்பில் 2 வருடங்கள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் பிரபல டெய்லி மெயில் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதாவது சுமார் 3.68 கோடி மதிப்பிலான அந்த ஒப்பந்தத்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக விளையாடும் வீரர்களின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து ஜேசன் ராய் வெளியேறுவதற்கு முடிவு செய்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் இங்கிலாந்துக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதை தெரிந்தும் அவர் இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

சொல்லப்போனால் 2019 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் சமீப காலங்களாக சுமாரான ஃபார்மில் தவிப்பதால் இங்கிலாந்து அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுப்பதில்லை. எடுத்துக்காட்டாக அதிரடி தொடக்க வீரரான அவருக்கு கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

மறுபுறம் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 ப்ளாஸ்ட், பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல், இந்தியாவின் நடைபெறும் ஐபிஎல் என கடந்த ஒரு வருடமாக அவர் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். அதனால் ஏற்கனவே வாய்ப்பு கிடைக்காத இங்கிலாந்து அணியை மொத்தமாக தவிர்த்து டி20 லீக் தொடர்களில் விளையாட முடிவெடுத்துள்ளதாகவும் அது பற்றி இங்கிலாந்து வாரியத்திடம் கடந்த சில வாரங்களாகவே அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:இந்திய டி20 அணியில் விராட் கோலிக்கு என்டு கார்டு கொடுக்க இருக்கிறாரா ரோஹித் சர்மா – பேட்டியால் ஏற்பட்ட பரபரப்பு

முன்னதாக சமீபத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் இதே போலவே டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மத்திய ஒப்பந்ததிலிருந்து வெளியேறினார். அந்த வரிசையில் இங்கிலாந்து அணியிலிருந்து முதல் வீரராக ஜேசன் ராய் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அப்படி வெளியேறும் வீரர்கள் நாட்டுக்காக தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு இழப்பதுடன் அந்நாட்டு வாரியம் அழைத்தால் மட்டுமே மீண்டும் விளையாடும் வாய்ப்பு பெற முடியும். அப்படிப்பட்ட முடிவை பணத்துக்காக ஜேசன் ராய் எடுத்துள்ளது இங்கிலாந்து ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement