அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற 42 வயதான இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து முக்கியமான முடிவை கையில் எடுத்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான அவர் இந்த ஆண்டு வரை அந்த அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் தனது பெயரை பதிவுசெய்த ஆண்டர்சன் :
அதுமட்டுமின்றி கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 269 விக்கெட்டுகளையும், 2007 முதல் 2009 வரை டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக 19 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அனுபவமுள்ள அவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் முடிவை கையில் எடுத்துள்ளார். தனது 42வது வயதில் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து யோசனை செய்த அவர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் ஏலத்திற்கான பட்டியலில் தனது பெயரினை பதிவு செய்துள்ளார்.
அவரது அடிப்படை விலையாக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008 முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட அவர் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தது கிடையாது. அதோடு கடைசியாக 2014-ஆம் ஆண்டு டி20 விளையாடிய போட்டியில் விளையாடிய அவர் அதன் பிறகு 10 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடுவதற்காக விண்ணப்பித்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : தூங்கினு இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க.. எங்களுக்கு தான் இப்போ கஷ்டம் – ஜாஷ் ஹேசல்வுட்
இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் நடைபெறயிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு உலகெங்கிலும் இருந்து மொத்தம் 1574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ள வேளையில் அதில் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை மட்டுமே ஏலத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



