22வது வருடமாக ஆண்டர்சன் சாதனை.. மீண்டும் ஏமாற்றிய கேப்டன் ரோஹித்.. தடுமாறும் இந்திய அணி?

IND vs ENG 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்தியா கடைசியில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

மறுபுறம் உங்களை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைப்போம் என்று சொன்னதை செய்து காட்டிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி காலை 9.30 மணிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

தடுமாறும் இந்தியா:
மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில் முகமது சிராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக முகேஷ் குமார், குல்தீப் யாதவ் மற்றும் அறிமுக வீரராக ரஜத் படிடார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனாலும் அதில் 14 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய 20 வயது இங்கிலாந்து ஸ்பின்னர் சோயப் பஷீரிடம் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை பெற்றார். இருப்பினும் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் எட்ஜ் கொடுத்த அவர் மீண்டும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் அவர் முதல் போட்டியில் மோசமாக விளையாடி சுமாரான ஃபார்மில் இருக்கிறார். அதனால் கம்பேக் கொடுக்க வேண்டிய அவர் இந்தப் போட்டியிலும் குறைந்த ரன்களில் அவுட்டாகி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க தவறினார். மறுபுறம் 2024 புத்தாண்டில் நடக்கும் இத்தொடரின் முதல் போட்டியில் விளையாடாத 42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்போட்டியில் தேர்வாகி விக்கெட்டை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 41 வருடம் 187 நாள் விசாகப்பட்டினம் போட்டியின் மூலம் அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ள – ஜேம்ஸ் ஆண்டர்சன்

இதன் வாயிலாக தன்னுடைய கேரியரில் அறிமுகமானது முதல் இப்போது வரை தொடர்ந்து 22வது வருடமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்து சாதனை படைத்து வருகிறார். அதை தொடர்ந்து நடைபெறும் போட்டியில் மறுபுறம் சிறப்பாக விளையாடும் ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51* ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 4* ரன்களும் எடுத்துள்ளனர். அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் 103/2 ரன்களை எடுத்துள்ள இந்தியா இப்போட்டியில் தடுமாற்றமான துவக்கத்தையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement